திண்டுக்கல்

காங்கிரஸ் எம்.பி.யை கண்டித்து பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் – திண்டுக்கல் அருகே பரபரப்பு

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தடுக்கும் காங்கிரஸ் எம்.பி.யை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி ஆர்.கோம்பை ஊராட்சி சீலக்கரட்டில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. சுமார் 56 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள தொழிற்பேட்டைக்கு ஒரு கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் நிலத்தை வருவாய் துறைக்கு சிட்கோ நிறுவனம் வழங்கியது. இதனையடுத்து வருவாய்த்துறையினர் நிலத்தை சிட்கோ வசம் ஒப்படைத்தனர்.

இதனைத்தொடர்ந்து சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 139 சிறு, குறு தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும் என்பதே சிட்கோவின் நோக்கம். இதன்மூலம் வறட்சியான இப்பகுதியை சேர்ந்த பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அவர்களது பொருளாதாரம் உயரும்.

இங்கு சிட்கோ தொழிற்பேட்டை அமைந்தால் சுமார் 5000 பேருக்கும் மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் காங்கிரசை சேர்ந்த ஜோதிமணி எம்.பி அப்பகுதிக்கு சம்பந்தமே இல்லாதவர்களுடன் வந்து சிட்கோ பணியை தொடங்க விடாமல் தடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை கண்டித்து கோஷம் போடவே காரில் ஏறி தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் மலர்வண்ணன் கூறுகையில், முற்றிலும் வறட்சியான இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் ஆகும். அதற்காகவே சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் இதனை தடுக்கும் நோக்கத்தில் ஜோதிமணி எம்.பி செயல்படுகிறார். இப்பணி நிறைவு பெற்றால் கழக அரசுக்கு நற்பெயர் கிடைத்துவிடும்.

பொதுமக்களின் மகத்தான ஆதரவு கிடைத்து விடும். வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் காங்கிரசோ, திமுகவோ வெற்றிபெற முடியாது. பொதுமக்களின் ஆதரவை பெற்று கழகம் வெற்றிபெற்று விடும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இப்பணியை செய்யவிடாமல் தடுக்க ஜோதிமணி எம்.பி. முயற்சி செய்கிறார். நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று 2 வருடம் ஆகியும் ஜோதிமணி எம்.பி தொகுதி பக்கமே எட்டி பார்க்கவில்லை. ஏன் நன்றி கூட சொல்ல வரவில்லை.

இப்பகுதியில் 8000 மரக்கன்றுகள் அமைக்க திட்டமிட்டு 5 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு உள்ளோம். மழை நீரை உறிஞ்சும் சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அழித்து விட்டு சுகாதாரமான வேப்பம், புங்கம் மரங்களை நட்டு வருகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் முதல்வருக்கும், வனத்துறை அமைச்சருக்கும், வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

காங்கிரஸ் எம்.பி.யை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.