தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு விரைவில் பயிற்சி வகுப்புகள் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

நாகப்பட்டினம்

வேதாரண்யம் ஜவுளி பூங்காவில் பணியாற்ற பெண்களுக்கு விரைவில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆயக்காரன்புலம் ஊராட்சியில் ரூ.96 கோடி மதிப்பீட்டில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதையடுத்து பூங்காவுக்கு தேவையான தையல் பயிற்சிக்கான இடங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வரும் டிசம்பர் முதல் வாரத்தில் ஜவுளி பூங்காவில் முதற்கட்டமாக 3 ஆயிரத்து 600 பெண்களுக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யபட்ட தையல் கருவிகளை கொண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைப்பார். அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் 3 கட்டமாக 9 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். இதற்கான ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நடைபெறும். இதில் ஜவுளித்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். சம்பளத்துடன் கூடிய பயிற்சி பெண்களுக்கு மட்டும் தான். தேவையான பணிக்கு மட்டும் ஆண்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான அறிவிப்பு இன்னும் 10 நாட்களுக்குள் வரும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பிரவின் பி.நாயர், திருப்பூர் ஜவுளித்துறை முதலீட்டாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம், நிர்வாக குழு சதாசிவம், சுபாஷ், வேதா, ஜவுளி பூங்கா திட்ட இயக்குனர் முரளி, கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.கிரிதரன், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் டி.வி.சுப்பையன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், மாவட்ட கவுன்சிலர் இ.தீலிபன், வாய்மேடு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சிசுந்தரம் மற்றும் பலர் உடனிருந்தனர்.