தற்போதைய செய்திகள்

தமிழக மக்களை இனியும் தி.மு.க. ஏமாற்ற முடியாது – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி

தூத்துக்குடி

அனைத்து பிரச்சினைகளிலும் இரட்டைவேடம் போடும் தி.மு.க. இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தார் மற்றும் கடம்பூர் பகுதியில் கழகத்தின் 49-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி வருமாறு:- 

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் திரைப்பட பிரச்சினையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. தமிழக மக்களை இனியும் அவர்கள் ஏமாற்ற முடியாது. பல விஷயங்களில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் இந்தியில் பேசியதை பெருமையாக பேசியவர் கருணாநிதி, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி கற்று கொடுக்கப் படுகிறது. அப்பள்ளிகளில் இடம் பெற திமுக எம்.பி.க்கள் டோக்கன் பெறுகின்றனர்.

உண்மையாக‌ இவர்கள் இந்தியை எதிர்த்தால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பெற்ற இடங்களை திரும்ப ஒப்படைத்து இருந்தால் திமுக தமிழ் உணர்வை பாராட்டலாம். அதிலும் இரட்டை வேடம். திமுகவினர் நடத்தும் பள்ளிகளிலும் இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு, காவேரி நீர் பிரச்சினை, நெய்வேலி என்.எல்.சி பங்கு விற்பனை என பலவற்றிலும் திமுக இரட்டை வேடம் தான். தமிழர்களின் பண்பாடு ஜல்லிக்கட்டை மீட்டது. மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தது அம்மாவின் அரசு தான் தமிழர்களின் உரிமைகள், லட்சியங்கள் அனைத்தையும் காவு கொடுத்தது திமுக ஆட்சி. சர்க்காரியா கமிஷன் வழக்கினை வாபஸ் பெற வேண்டும் என்பதற்காக கருணாநிதி கச்சதீவை தாரை வார்த்தார்.

எந்த பிரச்சினையிலும் திமுக இரட்டை வேடம் போடும் என்பது நாட்டு மக்களுக்கு தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. தமிழர்களின் உணர்வுகளை காக்கின்ற இயக்கம் அதிமுக,‌ நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை வந்தவுடன், அம்மாவின் அரசு மாணவர்களை தயார் படுத்த புதிய பாடத்திட்டம், பயிற்சி வகுப்புகள் நடத்தியது. இந்தியாவில் தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவன் முதலிடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டை விட இந்தாண்டு 10 சதவீதம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர். தமிழகத்தின் உரிமைகளை விட்டு தரமாட்டோம், உறவுக்கு கை கொடுப்போம்,‌ உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா வழியில் இந்த ஆட்சி நடைபெறுகின்றது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சிதம்பராபுரம் நீலகண்டன், மாவட்ட மகளிரணி செயலாளர் புதுக்கோட்டை ரத்தினம், மாவட்ட கழக பொருளாளர் ஆரோன் மோசஸ், மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சாம் கவுதம், கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.