தற்போதைய செய்திகள்

தர்மத்துக்கும்-அதர்மத்துக்கும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டி மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பேச்சு

மதுரை

வரும் சட்டமன்றத்தேர்தலில் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் தான் போட்டி இருக்கும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் மதுரை கிழக்கு தொகுதி கருப்பாயூரணியில் 49 அடி உயர கம்பத்தில் கழக கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவுக்கு மதுரை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தக்கார் பாண்டி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் எம்.ரமேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர்.செந்தில்குமார், மாவட்ட விவசாயப்பிரிவு பொருளாளர் அரசு, கிளை கழக செயலாளர்கள் பாண்டி, திருப்பதி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா கலந்து கொண்டு கழக கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:-

கருணாநிதி என்ற தீய சக்தியை நாட்டை விட்டு அப்புறப்படுத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கழகத்தை ஆரம்பித்தார். தற்போது இந்த இயக்கம் 49-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 16 லட்சம் தொண்டர்களுடன் புரட்சித்தலைவர் கழகத்தை தொடங்கினார்.

அவரது மறைவிற்கு பின் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாக்கி தந்துள்ளார். அதுமட்டுமல்லாது இந்திய அரசியல் வரலாற்றில் அதிகமுறை ஆட்சி செய்த கட்சி நமது இயக்கமாகும். கருணாநிதி வல்லவர், ஆனால் நல்லவர் இல்லை. அவரது மகன் ஸ்டாலின் நல்லவரும் இல்லை, வல்லவரும் இல்லை. சட்டமன்றத்தில் பேசும்பொழுது கூட கையில் துண்டுச்சீட்டு வைத்துக் கொண்டு தான் பேசுவார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தல் என்பது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் போட்டியாக இருக்கும். தர்மத்தின் பக்கம் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இருக்கிறார்கள். அதர்மத்தின் வழியில் எதிர்க்கட்சிகள் உள்ளன. தர்மம் தோற்பது போல இருக்கும். முடிவில் தர்மம் தான் வெல்லும். அதேபோல் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் கழகம் வெற்றிபெறும். புரட்சித்தலைவி அம்மாவின் லட்சிய முழக்கமான இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணி ஆற்றும். அதற்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றியே சாட்சி.

இவ்வாறு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.