தற்போதைய செய்திகள்

7.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரம் ஆளுநர் விரைவில் முடிவு எடுப்பார் – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு விரைவாக முடிவு எடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,ப ள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் உள்ளிட்டோர் 7.5 சதவீத மருத்துவ உள் ஒதுக்கீடு தொடர்பாக சந்தித்து பேசினர்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மருத்துவர்களாக உருவாகிட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதற்கான ஒப்புதல் கோரி முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் இன்று ஆளுநரை சந்தித்து பேசினோம். 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டமாக்கப்படும்போது அரசுப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவர்களாக உருவாக முடியும். எனவே, இது தொடர்பாக ஆளுநரை சந்தித்து தமிழ்நாட்டில் நிலவுகின்ற சூழலை தெரிவித்தோம்.

குறிப்பாக கிராமப்புற, நகர்ப்புறத்தில் படிக்கின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கினால்தான் அவர்கள் மருத்துவர்களாக முடியும். தமிழகம் சமூக நீதிக்கான மாநிலம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா காலத்தில் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ள நிலையில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு அடையாளம், அங்கீகாரம் அளிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். தமிழகத்தில் இன்றுள்ள நிலையில் விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். நாங்கள் கூறியதைப் பொறுமையுடன் கேட்ட ஆளுநர், விரைந்து முடிவெடுக்கிறேன். என்னுடைய பரிசீலனையில் உள்ளது. விரைவில் அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்தார். அவர் அதில் திருத்தங்கள் எதையும் சொல்லவில்லை. முதல்வர் கோரிக்கையைத் தெரிவித்த பிறகு உடனடியாக விரைவில் முடிவெடுக்கிறேன் என்று ஆளுநர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கவுன்சிலிங் நடக்காததையும், நீங்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே கவுன்சிலிங் நடக்கும் என்பதையும் ஆளுநரிடம் கூறிவிட்டோம். அவர் கட்டாயம் பரிசீலிக்கிறேன் என்று கூறினார்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.