சிறப்பு செய்திகள்

வீட்டுவசதி வாரிய திட்டங்கள் துணை முதலமைச்சர் ஆய்வு – பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

சென்னை

வீட்டு வசதி வாரிய திட்டங்கள் குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நந்தனம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய கூட்ட அரங்கில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களான 26903 அலகுகள் கொண்ட 40 சுயநிதி திட்டங்கள், 3 வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகளுக்கான திட்டங்கள், 38 மனை மேம்பாட்டுத் திட்டங்கள், 22 வணிக வளாக திட்டங்கள், 10 தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளுக்கான திட்டங்கள், 2 குடிசை மாற்று குடியிருப்புகளுக்கான திட்டங்கள் மற்றும் 5 வைப்பு நிதி திட்டங்கள் ஆகிய அனைத்து திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த துணை முதலமைச்சர் விரைவில் பணிகளை நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் பா.முருகேஷ், செயலர் மற்றும் பணியாளர் அலுவலர் பா.கணேசன், தலைமை பொறியாளர் பா.கண்ணன் (நகரம்), தலைமை பொறியாளர் (ஊரகம்) ரா.சரவணன் மற்றும் வீட்டுவசதி வாரிய உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.