சிறப்பு செய்திகள்

தமிழக முதலமைச்சருக்கு தெலங்கானா முதல்வர் நன்றி : தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கும் இரங்கல்

சென்னை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்துக்கு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 கோடி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார். இந்நிலையில், நிவாரண நிதி அறிவித்ததற்காக தமிழக முதல்வருக்கு தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை, தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு, மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

மேலும், தமிழ்நாடு முதல்வரின் தாயார் தவுசாயம்மாளின் மறைவுக்கு தெலுங்கானா மாநில முதல்வர் தனது இரங்கலையும் தமிழ்நாடு முதல்வருக்கு தெரிவித்துக் கொண்டார்.

இதுபோன்று தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.