தமிழகம்

வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றம் – சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் பேச்சு

கோவை

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் கலந்து கொண்டு 266 பயனாளிகளுக்கு ரூ.86.86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அனைத்து தரப்பு மக்களாலும், பாராட்டும் வகையிலான வளர்ச்சித் திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். அன்னூர் வட்டத்திலும் தேர்தல் நேரத்தில் தரப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சாலை வசதிகள், குடிநீர் தேவை, தெருவிளக்கு, உயர்மின்கோபுர விளக்குகள் என எண்ணற்ற வளர்ச்சி திட்டப்பணிகள் இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் முதல் மைசூர் வரை செல்லும் சாலை விரிவாக்க முன்னேற்ப்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. வட்டாட்சியர் அலுவலகம் சுமார் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. அன்னூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் கழக ஆட்சியில் வரலாற்று சிறப்பு மிக்க அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு 1,652 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க இயல்வதுடன், நீர் ஆதாரங்களை பெருக்கும் வகையில் குளம் குட்டைகள் புணரமைக்கப்படுவதால் இப்பகுதிகளில் நீராதாரங்கள் புத்துயிர் பெறும்.

இவ்வாறு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் பேசினார்.

முன்னதாக அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 266 பயனாளிகளுக்கு ரூ.86.86 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய சபாநாயகர்அதனைத் தொடர்ந்து நடமாடும் நியாய விலைக்கடை சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அன்னூர் ஊராட்சி ஒன்றியம் அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியில் ரூ.241 கோடி மதிப்பீட்டில் அன்னூர் அவிநாசி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதையும் அவர் நேரில் பார்வையிட்டார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி, கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்
பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் ப.சுரேஷ், அன்னூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எஸ்.ஏ.அம்பாள் பழனிசாமி, கரியம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சாய்செந்தில், வட்டாட்சியர் மு.சந்திரா மற்றும் அன்னூர் நகர கழக செயலாளர் சவுக்கத்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.