சிறப்பு செய்திகள்

கீழ்பவானி பிரதான வாய்க்காலில் இருந்து ஆகஸ்ட் 15ம்தேதி முதல் 24 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

கீழ்பவானி பிரதான வாய்க்காலில் இருந்து ஆகஸ்ட் 15ம்தேதி முதல் 24 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டங்களுக்குப்பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

காளிங்கராயன் வாய்க்காலில் 1.7.2020 முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நாள்தோறும் 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று (நேற்று) நடைபெற்ற விவசாய பிரதிநிதிகள் ஆலோசனைக்கூட்டத்தில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதனை ஏற்று 1.8.2020 முதல் தடப்பள்ளி அரக்கன் கோட்டை வாய்க்காலில் தினந்தோறும் 850 கனஅடி அளவில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் விவசாய பெருமக்களின் கோரிக்கைகளை ஏற்று, கீழ்பவானி பிரதான வாய்க்காலில் 15.8.2020 முதல் தினந்தோறும் 2300 கனஅடி வீதம் 24 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை விவசாய பெருமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.