தற்போதைய செய்திகள்

19 நாளில் 2,37,204 மெ. டன் நெல் கொள்முதல் செய்து அரசு சாதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலடி

சென்னை

தமிழகத்தில் 19 நாட்களில் மட்டும் 2,37,204 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து அரசு சாதனை படைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதலமைச்சரின் உத்தரவின்படி தமிழகத்தில் கடந்த 01.10.2020 முதல் துவங்கியுள்ள குறுவை கொள்முதல் பருவத்தில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் மொத்தம் 842 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 01.10.2020 முதல் 19.10.2020 வரை 2,37,204 மெ.டன் அதாவது 59,30,100 மூட்டை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்குரிய தொகை ரூ.460.62 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 46,951 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

விவசாயிகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் குறுவை கொள்முதல் பருவங்களில் 2009-ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 25,368 மெ. டன் அதாவது 6,34,200 மூட்டைகளும், 2011-ம் ஆண்டு குறுவை கொள்முதல் பருவத்தில் இதே காலகட்டத்தில் 1,68,316 மெ. டன் அதாவது 42,07,900 மூட்டைகளும் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.

இந்த அளவையும் நடப்பு குறுவை கொள்முதல் பருவத்தில் 19.10.2020 வரை செய்யப்பட்ட குறுவை நெல் கொள்முதலையும் ஒப்பிடும்போது தற்போதைய கொள்முதல் அளவான 2,37,204 மெ. டன் என்பது வரலாற்று சாதனையாகும். மேலும் தேவைப்படும் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறுவை காலத்து நெல்லை சாலையில் தான் காய வைப்பார்கள். இவற்றை தான் பொது விநியோக திட்டத்துக்கு அளிக்கிறோம்.

தற்போது செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தவிர, வேறு எங்கெல்லாம் நெல் அறுவடை பணி நடைபெறுகிறதோ அங்கெல்லாம் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க அனைத்து ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் எந்த காலத்திலும் பீதி அடைந்து விடக்கூடாது.
விவசாயிகளை இந்த அரசு பாதுகாப்புடன் வைத்துள்ளது. அரசுக்கு கெட்டப்பெயர் விளைவிக்கும் செய்திகளை ஊடகங்கள் ஊக்குவிக்கக்கூடாது. விவசாயிகள் விளைவித்த நெல் எந்த மூலையில் இருந்தாலும் அதை அரசு கொள்முதல் செய்யும். இதில் எந்த தயக்கமும் எங்களிடத்தில் இல்லை.

விவசாயம் பற்றி தெரியாததால் எதிர்க்கட்சி தலைவர் இது போன்ற குற்றச்சாட்டை கூறலாம். பெரும்பான்மையான இடங்களில் நெல் கொள்முதலில் எந்த பிரச்சினையும் இல்லை. ஒரு சில இடங்களில் உள்ள பிரச்சினைகள் உள்ளன. அவை பெரிது படுத்தப்படுகின்றன. எங்கள் துறையில் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை விடுமுறை நாட்களிலும் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களின் மனம் புண்படும்படி கருத்துக்களை தெரிவிக்ககூடாது. தற்போது நெல் கொள்முதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட யாராக இருந்தாலும் நான் நேரடியாக பதில் அளிக்க தயாராக இருக்கிறேன்.

மொபைல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கூட அரசு தயாராக உள்ளது. சில பிரச்சினை காரணமாக இன்னும் இதனை செயல்படுத்தவில்லை. அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் குறுவை பருவ கொள்முதலுக்கு தேவைப்படும் சாக்குகள் மற்றும் சணல் ஆகியவை போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் அனைத்து மண்டலங்களிலும் சேர்த்து ஒரு கோடியே 5 லட்சம் சாக்குகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த சாக்குகளை கொண்டு 4 லட்சம் மெ. டன் நெல் கொள்முதல் செய்ய இயலும்.

அனைத்து விவசாயிகளும் தங்களது நெல்லினை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனை செய்ய கொண்டு வருகின்றனர். அவ்வாறு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் இந்திய அரசு நிர்ணயித்துள்ள 17 சதவீத ஈரப் பதத்தை விட கூடுதலாக இருந்த போதிலும் விவசாயிகளின் நலன் கருதி, அதிக ஈரப் பதத்துடன் கூடிய நெல் மூட்டைகளும் முழுமையாக கொள்முதல் செய்யப்பட்டு நேரடியாக அரவைக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், 22 சதவீதம் வரை ஈரப் பதத்துடன் கூடிய நெல்லினையும் கொள்முதல் செய்வதற்கு ஆணை பிறப்பிக்கக்கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, மத்திய குழுவினர் ஓரிரு நாட்களில் டெல்டா மாவட்டங்களுக்கு வருகை தரவுள்ளனர்.

காவேரி டெல்டா மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்துவதற்கும், விவசாயிகளிடமிருந்து வரப்பெறும் புகார்களை களைவதற்கும், கொள்முதல் செய்து இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு உடனுக்குடன் இயக்கம் செய்வதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மண்டல மேலாளர்களின் நிலையில் தலா இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு கொள்முதல் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2019-2020 கொள்முதல் பருவத்தில் முதலமைச்சரின் உத்தரவுப்படி மொத்தம் 2135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 32.41 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத் தொகை ரூ.205 கோடி சேர்த்து மொத்தம் ரூ.6,130 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் 5,85,241 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த கொள்முதல் அளவானது தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச கொள்முதல் சாதனையாகும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.