சேலம்

சேலத்தில் மரவள்ளி கிழங்கு விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் – சத்துணவு திட்டத்தில் ஜவ்வரிசியை சேர்க்க கோரிக்கை

சேலம்

சத்துணவு திட்டத்தில் ஜவ்வரிசியை சேர்க்க முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்படும் என்று மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளிடம் சேகோசர்வ் தலைவர் உறுதி அளித்துள்ளார்.

சேலத்தில் சூரமங்கலம் அருகே உள்ள மரவள்ளி கிழங்கு விவசாயிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர் சதீஷ் முன்னிலை வகித்தார். இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் போது மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் வாழ்வு சிறக்க ஜவ்வரிசிக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். சத்துணவு திட்டத்தில் ஜவ்வரிசியை சேர்க்க தமிழக முதல்மைச்சரிடம் வலியுறுத்த வேண்டும். மரவள்ளி விவசாயிகளுக்காக விரைவில் முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து பேசினர். இதற்கு சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி பதில் தெரிவித்து, விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்து உடனே நிறைவேற்ற வழிவகை காணப்படும் என தெரிவித்தார்.

பின்னர் சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி செய்தியாளர்களிடம் கூறுகயைில், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். இதில் முக்கியமானது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மரவள்ளிக்கிழங்கு மாவு முழுமையாக தடை செய்ய வேண்டும் என்பது ஆகும். இதுகுறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மூலம் முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.

வெளிநாடுகளிலிருந்து மரவள்ளிக்கிழங்கு மாவு எனப்படும் ஸ்டார்ச் இறக்குமதி செய்ய தடை விதிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சத்துணவு திட்டத்தில் ஜவ்வரிசி உணவை சேர்க்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும். சேகோசர்வ் தொழில் இடைத்தரகர்கள் இல்லாமல் செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இடைத்தரகர்கள் இன்றி சேகோசர்வ் நிர்வாகம் நேரில் கொள்முதல் செய்து அதை ஆலைகளுக்கு தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.