தமிழகம்

வீரவணக்க நாள் காவலர் நினைவு சின்னத்தில் டி.ஜி.பி.- அதிகாரிகள் அஞ்சலி

சென்னை

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் நாள் காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி நேற்று சென்னை காமராஜர் சாலையிலுள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடந்த 1.9.2019 முதல் 31.8.2020 முடிய ஓராண்டு காலத்தில் இந்தியா முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்த 265 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அனைத்தொடர்ந்து முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி மற்றும் துறை தலைவர்கள், முன்னாள் காவல்துறை இயக்குநர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் கொரோனா தொற்றினால் வீர மரணம் அடைந்த காவல் ஆய்வாளர் எஸ்.பாலாமுரளியின் மனைவி கவிதா உள்பட வீர மரணம் அடைந்த காவலர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி பேசுகையில், கடந்த ஆண்டில் இந்தியாவில் பல பகுதிகளில் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் பெயர்களை நினைவு கூர்ந்தார். பின்னர் துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரமரணமடைந்த காவலர்களுகு்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், ஓய்வு பெற்ற காவல் உயரதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.