தற்போதைய செய்திகள்

சாதனை மாணவன் ஜீவித்குமாருக்கு பொற்கிழி, வெற்றி கோப்பை பரிசு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

மதுரை

புரட்சித்தலைவி அம்மாவின் அருளாசியுடன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆசியோடு கழக அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமின் போது நீட் தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாராட்டி 50,000 பொற்கிழி மற்றும் வெற்றி கோப்பையை வழங்கினார்.

கழக அம்மா பேரவை சார்பில் தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கத்தில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் நீட் தேர்வில் 720 க்கு 664 மதிப்பெண் எடுத்து இந்திய அளவில் அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த தேனி மாவட்டம் சில்வார்பட்டி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவன் என்.ஜீவித்குமாருக்கு பாராட்டு விழா நடத்தி 50,000 ரூபாய் பொற்கிழி மற்றும் வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என்.ஜெகதீசன் முன்னிலை வகித்தார். பாரதியுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்புரை ஆற்றினார். மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் பாராட்டி பேசினார்.

முகாமை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் 50,000 ரூபாய் பொற்கிழியை வழங்கினார்.

நிகழ்ச்சியில் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் பேராசிரியர்கள் எம்.கண்ணன், ஜேனட்சங்கர், எஸ்.ராஜூ, எம்.புவனேஸ்வரன், புலவர் சங்கரலிங்கம், அம்மா சேரிடபில் டிரஸ்ட் செயலாளர் யு.பிரியதர்ஷினி, கழக அம்மா பேரவை துணை செயலாளர் பா.வெற்றிவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;-

நீட் தேர்வில் பல்வேறு விவாதம், சர்ச்சை இருந்தபோதிலும் முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என்று சாதித்த இந்த இளைஞரை இருகரம் கூப்பி வாழ்த்துகிறேன். இந்த சாதனை சாதாரண சாதனை அல்ல. வரும் தலைமுறைக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் நம்பிக்கையின் விதையாகும் இளையத் தலைமுறைக்கு இது முன் உதாரணமாகும். அரசு பள்ளி மாணவன் நீட் தேர்வில் சாதிக்க முடியும் என்று இதன்மூலம் இந்த மாணவன் சாதித்து காட்டியுள்ளார்.

நீட் தேர்வை சில ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டுமென புரட்சித்தலைவி அம்மாவின் அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்தது அது ஒருபுறம் இருந்தாலும் நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு அரசின் சார்பில் நீட் தேர்வு பயிற்சி மையங்களையும் முதலமைச்சர் உருவாக்கி கொடுத்தார்.

நீட் தேர்வில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை வழங்க முதலமைச்சர் மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். தற்போது கூட முதலமைச்சர் வழிகாட்டுதல் படி 5 அமைச்சர்கள் நேரில் சென்று ஆளுநரிடம் விரைந்து ஒப்புதல் அளிக்க கோரிக்கை வைத்தனர். அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முதலமைச்சர் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார். அவருக்கு துணை முதலமைச்சர் உறுதுணையாக இருந்து வருகிறார்.

முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார் நிரூபித்து காட்டி உள்ளார். விடா முயற்சி எடுத்தால் மாணவர்கள் சாதிக்க முடியும், நீட் தேர்வுக்கு நான் ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை, சாதித்தவர்களின் வரலாற்றை மாணவர்கள் திரும்பி பார்க்க வேண்டும், அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் தான் இன்று பல உலக சாதனையை படைத்துள்ளார்கள் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முயன்றால் வெற்றி பெறலாம் அதற்கு இந்த மாணவனே சாட்சி. நீங்களும் இதுபோன்று முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.