தற்போதைய செய்திகள்

விவசாயிகள் விளைவிக்கும் கடைசி நெல்மணி வரை அரசு கொள்முதல் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

திருவாரூர்,

விவசாயிகள் விளைவிக்கும் கடைசி நெல்மணி வரை அரசு கொள்முதல் செய்யும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட தளிக்கோட்டை, மேலநெம்மேலி மற்றும் மன்னார்குடி கீழப்பாலம் ஆகிய பகுதிகளிலுள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு செய்தார். இவ்ஆய்வில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை, அரசு முதன்மை செயலர் தயானந்தகட்டரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநர் எம்.சுதாதேவி, மாவட்ட ஆட்சித்தலைவர் த.ஆனந்த் உடனிருந்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்ஆசியோடு தமிழகத்தின் சாதாரண மக்களின் தேவைகளை நிறைவேற்றி வரும் முதலமைச்சர் விவசாயிகளின் நலன்கருதி பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை எந்தவித காலதாமதமின்றி ஒரு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டு அதற்குரிய தொகை 24 மணி நேரத்திற்குள்ளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இதுவரை இல்லாத அளவாக கடந்த காரீப் பருவத்தில் 32,41,000 மூட்டைகள் நெல்கொள்முதல் செய்தது போன்று இந்த பருவம் தொடங்கிய 21 நாட்களில் 65 லட்சம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்பு நிகழ்வாகும். மேலும், திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 1 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 1 லட்சம் ஏக்கரில் 90,000 ஏக்கர் அறுவடை முடிந்துவிட்டது. கிட்டதட்ட 90 சதவீதம் அறுவடை முடிந்துள்ளது.

விவசாயிகளின் நலன்கருதி, மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஈரப்பத அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தாலும் அங்காங்கே மழை போன்ற இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள் பாதிப்படைந்துவிட கூடாது என்பதனை கருத்தில் கொண்டு ஈரப்பத அளவில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டும் நெல்கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. மேலும், மத்திய அரசிடம் ஈரப்பத அளவை 17லிருந்து 22 சதவீதமாக உயர்த்தி வழங்கிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து, விவசாயிகள் விளைவிக்கும் கடைசி நெல்மணி வரை அரசு கொள்முதல் செய்யும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இவ்ஆய்வில் பொது மேலாளர் (வாணிபம்) காளிதாஸ், முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி, துணை மேலாளர் கான்டீபன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.