தற்போதைய செய்திகள்

50 அரியவகை நூல்கள் ஆண்டுதோறும் புதுப்பிப்பு – அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

சென்னை

ஆண்டுதோறும் 50 அரிய வகை நூல்கள் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டு, 50 ஆண்டுகள் ஆன நிலையில் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சிகள் நிறுவன தோற்றுவிப்பு நாளான நேற்று சென்னை, தரமணியில் பேரறிஞர் அண்ணா கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. தொடக்க விழாவில் தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், கலந்து கொண்டு இந்நிறுவனத்தை நிறுவிய பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு, மாலை அணிவித்தும் இந்நிறுவனத்திற்கான கருத்துருவை வழங்கிய தனிநாயகம் அடிகளாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். இதில் இந்நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் வரவேற்புரைஆற்றினார்.

மொழியியல்புல இணைப் பேராசிரியர் பெ.செல்வகுமார் முன்னிலை வகித்தார். தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலர் மகேசன் காசிராஜன் தலைமையுரை ஆற்றினார்.

இதையடுத்து, சுவாமி சுப்ரமணியம் தலைமையில் செயல்படும் வள்ளலார் ஆய்விருக்கையைத் தொடங்கி வைத்து, அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையில் ஆட்சியமைந்த கடந்த 9 –ஆண்டுகளில் எண்ணற்ற அரிய, ஆய்வுப் புத்தக வெளியீடுகள், பல்வேறு தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகள், தமிழை வளப்படுத்தும் ஆய்விருக்கைகள் நிறுவி, தமிழாய்வு உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வந்திருப்பது பாராட்டத்தக்கது. இனி, அடுத்து வரும் முக்கிய மூன்று அறிவிப்புகளாக, தமிழ்ப்பல்கலைக் கழக ஏற்பு பெற்ற ஒருங்கிணைந்த முதுகலை தமிழ் பட்டய வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான கட்டணமில்லா கல்வி இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். தமிழின் வளத்துக்கும் நலத்துக்கும் பலம் சேர்க்கும் 50 – அரிய நூல்கள் நிறுவனப் பதிப்புத் துறையின் மூலம் ஆண்டுதோறும் பதிப்பித்துப் புதுப்பிக்கப்படும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பொன்விழா ஆண்டுமலர் முதலமைச்சரல் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் பேசினார்.

இவ்விழாவில், எம்.ஜி.ஆர் கலை (ம) சமூகவியல் மேம்பாட்டு ஆய்விருக்கை பொறுப்பாளர் ம.செ. இரபிசிங், அம்மா தமிழ்ப் பீட நிறுவனர் ஆவடிக்குமார், புலவர் வெற்றியழகன், பாரதி சுகுமாரன், பாக்கம் தமிழன், இதயகீதம் இராமானுஜம், தமிழார்வலர் விசய. சக்தி சேதுபதி, நந்திவரம் பா.சம்பத்குமார், நிறுவனப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் தமிழார்வலர் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை இளந்தமிழர் இலக்கியப் பேரவை நிறுவனர் சட்டம். மு.முனீசுவரன் தொகுத்து வழங்கினார். முடிவில், எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்விருக்கையின் ஆய்வு உதவியாளர் ஈ.விசய் நன்றி கூறினார்.