தற்போதைய செய்திகள்

தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது – அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கு

சென்னை

தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்து விட்டதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை பட்டினம்பாக்கம் இல்லத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

7.5 சதவீத மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி தான் ஆளுநரை சந்தித்தோம். ஆளுநர் சந்திப்பு நம்பிக்கைக்குரிய விஷயமாக அமைந்திருந்தது. விரைந்து நல்ல முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார். ஆளுநர் முடிவிற்கு பின் அரசு நடவடிக்கை எடுக்கும். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கழக கூட்டணி பலமாக உள்ளது. திமுக கூட்டணி பலவீனமாக இருப்பதால் தான் அவ்வப்போது ஆலோசனை மேற்கொள்கின்றனர். தேர்தலை சந்தித்து கழகம் நிச்சயம் வெற்றி பெறும், ஆனால் அந்த நம்பிக்கை திமுகவிடம் இல்லை என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகனின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிக்கையில், நமது முதலமைச்சர் கழகத்திற்கு மட்டும் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அவர் தான் முதலமைச்சர் வேட்பாளர். கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்தால் மட்டுமே கொரோனவை ஒழிக்க முடியும், ஆனால் அதற்கு தற்போது வழி இல்லை, பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். அது மட்டுமே கொரோனாவை தடுக்க ஒரே வழி, ஆரோகியமான உணவை சாப்பிட்டால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

விஜய் சேதுபதி மகளை விமர்சனம் செய்பவர்கள் மனித ஜென்மம் அற்றவர்கள், அவர்களுக்கு நிச்சயம் தண்டணை கிடைக்கும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறவர்களை சைபர் கிரைமில் புகார் அளிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றார்.

தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகாபாரதம் குறித்து கமல் பேசியது தொடர்பான கேள்விக்கு, கடவுள் இல்லை என்று கூறும் அவர், வாக்குக்காகவும், அரசியலுக்காகவும் மதம் குறித்து பேசி வருகிறார். தனது பெயரில் ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கப்பட்டது தொடர்பாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சைபர் கிரைமில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.