சிறப்பு செய்திகள்

தேனி சோத்துப்பாறை நீர்தேக்கத்தில் 26-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு

சென்னை

பாசனம் மற்றும் நகராட்சி குடிநீர் தேவைக்கு தேனி சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து 59 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து பழைய நன்செய் மற்றும் புதிய புன்செய் ஆயக்கட்டு பாசனத்திற்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும், தண்ணீர் திறந்து விடக் கோரி வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடி மக்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து முதல் போக சாகுபடி 1,825 ஏக்கர் பழைய நன்செய் நிலங்களுக்கும், 1,040 ஏக்கர் புதிய புன்செய் நிலங்களுக்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து 26.10.2020 முதல் 15.3.2021 வரை, முதல் 51 நாட்களுக்கு விநாடிக்கு 30 கன அடி வீதமும், அடுத்த 31 நாட்களுக்கு விநாடிக்கு 27 கன அடி வீதமும், கடைசி 59 நாட்களுக்கு விநாடிக்கு 25 கன அடி வீதமும், மொத்தம் 331.95 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.