சிறப்பு செய்திகள்

கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவு

சென்னை

கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 25.3.2020 முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் அக்டோபர் 1-ந்தேதி முதல் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் திறப்பு நேரத்தை மேலும் அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

புரட்சித்தலைவி அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. மேலும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பும் குறைவாக இருந்து வருகிறது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தினை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய்த் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் முழுக் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் 22.10.2020 முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

புரட்சித்தலைவி அம்மாவின் அரசு எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகளாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும், நோய்த் தொற்றின் பரவல் தொடர்ந்து குறைந்து வரும் இந்த சூழ்நிலை நீடிக்க எதிர்வரும் பண்டிகை காலங்களில், நோய்த் தொற்று அதிகரிக்காமல் தடுக்க கடைகள், பொது இடங்களில் அதிகம் கூடுவதை தவிர்க்கவும், முகக்கவசம் அணிவதையும், குறைந்தது 6 அடி இடைவெளி கடைப்பிடிப்பதையும் அடிக்கடி சோப்பின் மூலம் கைகளை கழுவுவதையும், பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.