திருவள்ளூர்

தி.மு.க.வின் சூழ்ச்சிகளை முறியடித்து கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம் – வி.பி.பி.பரமசிவம் சபதம்

திருவள்ளூர்

தி.மு.க.வின் சூழ்ச்சிகளை முறியடித்து கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் சபதம் மேற்கொண்டார்.

திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஆண்டார்குப்பம், பொன்னேரி, தடபெரும்பக்கம், மீஞ்சூர் பகுதிகளில் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தலைமையில் நடைபெற்றது.

மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் மோகன்மோகன வடிவேல், சோழவரம் ஒன்றிய செயலாளர் கார்மேகம், பொன்னேரி பேரூர் கழக செயலாளர் உபயதுல்லா, மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் பட்டாபிராமன், 15-வது வட்ட கழக செயலாளர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மீஞ்சூர் ஒன்றிய பாசறை செயலாளர் சுதாகர், சோழவரம் ஒன்றிய பாசறை செயலாளர் எஸ்.ராஜன், பொன்னேரி பேரூர் பாசறை செயலாளர் உமாசங்கர், ஆரணி பேரூராட்சி பாசறை செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவம் மற்றும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன், கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

கழகத்தில் மட்டும் தான் சமதர்மம் பேணி காக்கப்படுகிறது. தொண்டர்கள் அனைவருக்கும் பதவிகளை தரும் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. என் தந்தை மறைவிற்கு பிறகு நான் கழகத்தின் பாசறையில் இணைந்தேன். நான் அனைவரையும் போல் பாசறையில் இருந்து படிப்படியாக வளர்ந்து இன்று மாநில பாசறை செயலாளராக உயர் பதவியில் இருக்கிறேன்.

நான் பாசறையில் இருந்தபோது சிறு, சிறு மருத்துவ முகாம் நடத்தினேன். நிர்வாகிகளுக்கு மருத்துவ உதவிகளை செய்தேன். கழக நிர்வாகிகள் எப்போது உதவி கேட்டாலும் கேட்டவுடனேயே செய்து கொடுத்ததால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்னை வேடச்சந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அறிவித்தார். பின்பு முதலமைச்சர் என்னை மாநில பாசறை செயலாளர் பதவியை கொடுத்தார்.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால் நம்மால் இயன்றவரை கழகத்திற்கு உழைத்தால் மிகப் பெரிய பதவி கிடைக்கும். அப்படி உழைத்தால் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் கழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். எனவே நீங்கள் கழக அரசின் சாதனைகளை பொது மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள். மேலும் பூத் வாரியாக சென்று திண்ணை பிரச்சாரம் செய்து மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி ேக.பழனிசாமியை முதலமைச்சராக வேண்டும்.

கொரோனா காலகட்டத்திலும் கூட ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதலமைச்சர், அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனால் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு செய்யும் தலைவராகவும், அதிலேயே கட்சி நடத்தும் தலைவராகவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திகழ்கிறார். மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த போராடும் ஒரே இயக்கம் கழகம். வரும் சட்டமன்றத் தேர்தலில் கழகம் வெற்றி பெற ஏதுவாக திமுகவின் சூழ்ச்சிகளை உடைத்திடும் ஈட்டியாக கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயல்படும்.

இவ்வாறு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. பேசினார்.

இந்நிகழ்ச்சியின் போது பொன்னேரி தொகுதி வெள்ளகுளம் கிராமத்தை சேர்ந்த நீட்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மலர்விழி என்ற மாணவிக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகையையும், ரூ.5 லட்சம் மதிப்பில் தொகுதியில் உள்ள அனைத்து கிளை பாசறை நிர்வாகிகளுக்கும், மகளிர் நிர்வாகிகளுக்கும் விளையாட்டு பொருட்கள் அடங்கிய கிட்டை திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் வழங்கினார்.