மற்றவை

திருவண்ணாமலை ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர்கள் மனு

திருவண்ணாமலை

ஆரணி, போளூர் தொகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய 10 முக்கிய கோரிக்கைகள், திட்டங்கள் குறித்து முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள முக்கிய 10 கோரிக்கைகள் மற்றும் போளுர் தொகுதியில் உள்ள முக்கிய 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைச்செயலாளரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்.எல்.ஏ. கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும் ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷை தனித்தனியாக சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இதில் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளரும், ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தன்னுடைய ஆரணி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாணவ, மாணவிகள் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்தல் மற்றும் ஆரணி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை பல்நோக்கு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி தருதல், ஆரணி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய வளாகம் புதிதாக அமைத்து தர வேண்டும்.

ஆரணி ஊராட்சி ஒன்றியம் ஒன்னுபுரம் ஊராட்சியில் நெசவாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் பட்டு கைத்தறிக்கு பயன்படுத்தப்படும் பட்டு நூல்களுக்கு சாயம் ஏற்றும் போது வெளியேறும் சாயக்கழிவுகளை, சாயக்கழிவு நீர் அருகாமையில் உள்ள ஏரிக்கு சென்று கலப்பதால் சுற்றியுள்ள கிராம மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே சுத்திகரிப்பு நிலையம் அளித்தல் வேண்டும்.

அம்மாபாளையம் ஊராட்சியில் இருந்து கண்ணமங்கலம் பேரூராட்சிக்கு செல்லும் சாலையின் குறுக்கே உள்ள ரயில்வே சுரங்க பாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்புவதால் சாலைகள் துண்டிக்கப்பட்டு பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது எனவே புதிய ரயில்வே மேம்பாலம் அமைத்து தரக்கோரியும்,

கீழ் நகர் ஊராட்சியில் உள்ள ஏரிக்கு வரும் நீர் வரத்து கால்வாய் சுமார் ஐந்து கிலோ மீட்டர் அளவிற்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் கமண்டல நாகநதியிலிருந்து வரும் தண்ணீரை ஏறிக்கு நிரப்ப முடியவில்லை.

எனவே விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மண் சரிவு ஏற்பட்டுள்ள ஏரிக்கால்வாயை தூர்வாரி கீழ்நகர் ஏரிக்கு தண்ணீரை நிரப்ப வேண்டும். ஆரணி ஒன்றியம் ச.வி.நகரம்-தசாரப்பேட்டை நேத்தப்பாக்கம் வழியாக கமண்டல நாகநதியின் ஆற்றின் குறுக்கே மொமுகம்பூண்டி சாலையை இணைக்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.

இரும்பேடு ஊராட்சியில் கமண்டல நாகநதி குறுக்கே விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நிலத்தடி நீர் மட்டும் உயரரும் வகையில்புதிய தடுப்பணை அமைத்து தருவது, ஆரணி வேலூர் சாலை மற்றும் ஆரணி விழுப்புரம் சாலைகளை இணைத்து ஆரணி சுற்றுவட்ட சாலையாக (ரிங் ரோடு ) அமைத்து தருதல்,

மேற்கு ஆரணி ஒன்றியம் தேவிகாபுரம் ஊராட்சியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிதாக ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைத்து தருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மனு அளித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ, ஆரணி நகர கழக செயலாளர் அசோக் குமார், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.