தற்போதைய செய்திகள்

தூய்மை காவலர்களுக்கு அரசு உதவ வேண்டும் – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை

தூய்மை காவலர்கள் வாழ்வில் முன்னேற ஊதிய உயர்வு வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைக்காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர்கள் வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் சேகரிக்கும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

கிராமப்புற பகுதிகளில் தூய்மைக்காவலர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.3,600 கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். இன்றைய கால கட்டத்தில் ஒரு மாதத்திற்கு ரூ. 3,600 சம்பளம் என்ற ரீதியில் பணி செய்தால் பணி சிறக்கலாமே தவிர அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான பொருளாதாரம் போதாது.

எனவே தமிழக அரசு, மாநிலம் முழுவதும் தூய்மைக்காவலர்களாக பணிபுரிவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி, பணி நிரந்தரம் செய்து அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய உதவ வேண்டும் என்று த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கிறேன்.”

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.