சிறப்பு செய்திகள்

காவேரி- குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

புதுக்கோட்டை

காவேரி- குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், சீறிச்செல்லும் ஜல்லிக்கட்டு காளையை மாடுபிடி வீரர் ஒருவர் அடக்குவது போன்று நிறுவப்பட்டுள்ள வெண்கலச் சிலையை திறந்து வைத்து ஆற்றிய உரை வருமாறு:-
வீரமிகு விராலிமலை மண்ணில் பிறந்த அனைவருக்கும் உள்ள வீரத்தை பறைசாற்றுகிற விதமாக, விராலிமலை முருகன் திருக்கோயிலுக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள, வீரமிகு இளைஞர் காளையை அடக்குகின்ற சிலையை, தத்ரூபமான காட்சியை உங்கள் மனதிலே நிற்கின்ற அளவிற்கு அமைத்திருக்கிறார்கள்.

புதுக்கோட்டை மண் வீரம் நிறைந்த மண். தமிழகத்திலேயே அதிகமாக ஜல்லிக்கட்டு நடைபெறுகின்ற மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் என அமைச்சர் தெரிவித்தார். கடந்த ஆண்டு 110 இடங்களில் ஜல்லிக்கட்டு இந்த மாவட்டத்தில் நடந்துள்ளது. ஆகவே, இந்த மண்ணில் பிறந்த இளைஞர்கள் வலிமை மிக்க காளைகளை அடக்கக்கூடிய வீரமிக்க இளைஞர்கள், அவர்களை பாராட்டுகிறேன். இந்தச் சிலையை வடிவமைத்த அமைச்சருக்கும் மற்றும் வருகைதந்த அனைவருக்கும் நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகள் அதிகமாக வசிக்கின்ற இந்தப் பகுதி மக்களுக்கு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கண்ட கனவை நனவாக்குகின்ற விதமாக காவேரி-குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும். இது மக்கள் மற்றும் விவசாயிகளின் கனவுத் திட்டம். நீண்ட காலமாக வானம் பார்த்த பூமியாக இருக்கின்ற புதுக்கோட்டை மாவட்டத்தை வளம் மிக்க பூமியாக மாற்ற அம்மாவின் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

காவேரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கால்வாய் அமைப்பதற் கான நில ஆர்ஜிதப் பணி முடிந்தவுடன் இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு நானே நேரடியாக வருவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பூமி பசுமையான பூமியாக மாறும். வேளாண் பெருமக்கள் கண்ட கனவை அம்மாவின் அரசு நிறைவேற்றித் தரும்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், சீறிச்செல்லும் ஜல்லிக்கட்டு காளையை மாடுபிடி வீரர் ஒருவர் அடக்குவது போன்ற அற்புதமான சிலையை கலை வடிவுடன் தத்ரூபமாக வடிவமைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், அதனை தத்ரூபமாக வடிவமைத்த சிற்பிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.உமா மகேஸ்வரி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.