தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சி அமையும் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி

தூத்துக்குடி

தமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சியே அமையும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரணி கிராமத்தில் கழக அலுவலகம் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் ஜவஹர் தலைமையில் நடந்தது. இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றிய கழக அலுவலகத்தை திறந்து வைத்தனர். பின்னர் கழக கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

தமிழக மக்கள் வளர்ச்சிக்காக, இரவு, பகல் பாராது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பாடுபட்டு வருகிறார். அவரது தலைமையில் தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைவது உறுதி. அதற்காக தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய கழக செயல்வீரர்கள் இரவு பகல் பாராது அயராது பாடு படவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.