சிறப்பு செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு – மதுரை வங்கியில் இருந்து துணை முதலமைச்சர் பெற்று ஒப்படைத்தார்

மதுரை

மதுரை வங்கியில் இருந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொடுத்த தங்க கவசம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேசிய தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 27 -ந் தேதி முதல் 30-ந் தேதி வரை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு 113-வது ஜெயந்தி மற்றும் 58-வது குரு பூஜை விழா நடைபெறுகிறது. பசும்பொன் நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு புரட்சித்தலைவி அம்மா கழகத்தின் சார்பில் 13 கிலோ தங்க கவசத்தை கடந்த 2014-ம் ஆண்டு வழங்கினார்.

ரூ.5.5 கோடி மதிப்பிலான தங்க கவசம் ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவின் போது கழகத்தின் சார்பில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது. ஜெயந்தி விழா முடிந்ததும் தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இந்த ஆண்டு ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து தங்க கவசத்தை கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தேவர் திருமகனார் நினைவாலய காப்பாளர் க.காந்தி மீனாள், நடராஜத் தேவர் ஆகியோரால் நேற்று கையொப்பமிட்டு பெற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.