தற்போதைய செய்திகள்

7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் ஆளுநர் நிச்சியம் அனுமதி அளிப்பார் – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

7.5 சதவீத இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஆளுநர் நிச்சயம் அனுமதி அளிப்பார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்து ஆதிதிராவிடர் சட்டப் பட்டதாரிகள் சொந்தமாக தொழில் தொடங்க ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு சட்டப் பட்டதாரிகளுக்கு தலா ரூ. 50, 000 காசோலைகளை வழங்கினார்.

இதன் பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல் படிப்படியாக மதுகடைகள் மூடப்படும். இதுவரை 500 மது கடைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும். ஆதி திராவிட மக்கள் சமூகத்தில் உயரவேண்டும் என்பதே மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்,ஜி.ஆர், அம்மா ஆகியோரின் கனவாக இருந்தது. அதனை கழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. ஆதிதிராவிடர் மேம்பாட்டுக்காக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், தொழில் செய்யவும் கழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து ஆளுநருக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்துள்ளோம். நிச்சயம் அனுமதி கொடுப்பதாக ஆளுனர் கூறியுள்ளார். அதற்கு 3 வாரம் வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். இதைத்தான் நான் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று சொல்லியிருந்தேன். இதை சரியாக புரிந்து கொள்ளாமல் ஸ்டாலின் பேசுகிறார். ஆளுநர் பரிசீலனையில் இருப்பதை, அரசால் அழுத்தம் மட்டுமே கொடுக்க முடியும். கையெழுத்து போடுங்கள் என்று நிர்பந்திக்க முடியாது. ஆளுநர் சொன்னதை வெளியில் சொல்ல முடியாது.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் நிச்சயம் அனுமதி அளிப்பார் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு தெரியும். இருந்தும் எதிர்க்கட்சிகள் போராட்டம் மூலம் தான் வெற்றி கிடைத்தது என்று சொல்லவே இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள். குரூப் 4 தேர்வு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு முறை என்பது மாறாது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கப்படும்.

வேளாண் மசோதா குறித்து திட்டமிட்ட நாடகத்தை தி.மு.க. நடத்தி வருகிறது. வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான விலை கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. திமுக இந்த விவகாரத்தை வேண்டுமென்றே அரசியலாக்கி வருகிறது. மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தபோது திமுக, விவசாயிகளுக்கு எந் த திட்டங்களையும் கொண்டுவராமல், ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் துரோகம் இழைத்தது.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.