தற்போதைய செய்திகள்

திமுகவுக்கு இனி எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

மதுரை

வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சிங்கராஜ் பாண்டியன் தலைமை வகித்தார். கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்திய அரசியல் வரலாற்றில் முதன் முதலில் தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியை உருவாக்கி தந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். தற்போது முதல்வரும், துணை முதல்வரும் கிளைகள் தோறும் நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர், மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் மட்டும் 664 இளைஞர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

நீங்கள் அனைவரும் இந்த இயக்கத்திற்கு அம்பாசிடராக இருந்து அம்மா அரசின் சாதனை திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றன. அதையெல்லாம் நீங்கள் முறியடிக்க வேண்டும்.

ஏழை, விவசாயிகள் என சாமானியர்களுக்காக தொடங்கப்பட்டது தான் நமது இயக்கம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்துள்ளனர். அதனை செல்பேசி வாயிலாக அனைவரிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும். முதல்வர் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து உடனடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை நீங்கள் செய்ய வேண்டும்.

இந்தியாவில் உள்ள எந்த முதலமைச்சரும் அறிவிக்காத வகையில் கொரோனா தொற்று நோய் குணமடைய மருந்து கண்டுபிடித்தவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசு செலவில் தடுப்பூசி போடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்து உள்ளார். இதன் மூலம் எட்டரை கோடி மக்களுக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக முதலமைச்சர் திகழ்கிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருக்கிறார்.

சமூக வலைதளங்களில் உண்மையான செய்திகளை மட்டுமே பரப்ப வேண்டும். கழகத்தை ஆதரிக்க மக்கள் தயாராக உள்ளனர். ஆனால் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினர் மக்களிடம் தவறான தகவல்களை பரப்பி ஏமாற்றுவார்கள். அதற்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்க வேண்டும்.

நமது இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூறினார்.அது நிச்சயம் நடக்கும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் அமோக வெற்றி பெற்று கழகத்தின் 50-வது பொன்விழாவை ஆட்சிக்கட்டிலில் இருந்தபடியே கொண்டாடுவோம். இந்த இயக்கம் இன்று போகும், நாளை போகும் என்று கிளி ஜோசியம் சொன்னார் ஸ்டாலின். ஆனால் நாம் கோட்டைக்கு தான் சென்று கொண்டிருக்கிறோம். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக கூட வராது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.