தற்போதைய செய்திகள்

22 நாளில் 72 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

திருவாரூர்

22 நாட்களில் 72 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் மூலங்குடி மற்றும் நன்னிலம் வட்டம் குவளைக்கால் ஆகிய பகுதிகளிலுள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

டெல்டா பகுதியில் விளைவிக்கப்பட்ட குறுவை நெல்லினை விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவினை முதலமைச்சர் பிறப்பித்துள்ளார். டெல்டா மாவட்டத்தை பொறுத்தவரையில் விவசாயம் தான் முதன்மை தொழிலாக உள்ளது. குறுவை சாகுபடி 8 வருடங்களுக்கு பின்னர் மிகச்சிறப்பாக விளைச்சல் கண்டுள்ளது.

டெல்டா வரலாற்றிலேயே சென்ற ஆண்டு காரீப் பருவத்தில் 32,41,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் டெல்டா பகுதியிலுள்ள 6,00,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதற்குரிய தொகையும் 24 மணி நேரத்திற்குள்ளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது என விவசாயிகளின் வங்கிகணக்கில் செலுத்தப்பட்ட மொத்த தொகை ரூ.6130 கோடி ஆகும்.

அதுபோன்று, இதுவரை இல்லாத அளவாக கடந்த காரீப் பருவத்தில் 2,85,000 மூட்டைகள் நெல்கொள்முதல் செய்தது போன்று இந்த பருவம் தொடங்கிய 22 நாட்களில் 72 லட்சம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்பு நிகழ்வாகும். திருவாரூர் மாவட்டத்தில் 249 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 93,727 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 17,428 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அவர்களுக்கு உரிய தொகை ரூ.171.60 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலருமான கே.மணிவாசன், மாவட்ட ஆட்சித்தலைவர் த.ஆனந்த், கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், பொது மேலாளர் (வாணிபம்) காளிதாஸ், முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி, துணை மேலாளர் காண்டீபன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.