தற்போதைய செய்திகள்

மலைவாழ் மக்கள் 1433 பேருக்கு ரூ.4.32 கோடியில் நலத்திட்ட உதவி – பீஞ்மந்தையில் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

வேலூர்

பீஞ்சமந்தையில் மலைவாழ் மக்கள் 1433 பேருக்கு ரூ.4.32 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

அணைக்கட்டு வட்டம் பீஞ்சமந்தை கிராமத்தில் வாழும் மலைவாழ் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 1433 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 32 லட்சத்து 35 ஆயிரத்து 788 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வணிக சரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு அவின் பெருந்தலைவர் த.வேலழகன் முன்னிலை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

நகர பகுதிகளுக்கு இணையாக பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்தான் கொல்லை ஆகிய பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, மின்சார வசதி, பள்ளிக்கூட வசதி, நியாயவிலைக்கடை, போக்குவரத்து வசதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். மேலும் மலைவாழ் மக்களின் பிரதிநிதிகள் வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சரின் அனுமதி பெற்று படிப்படியாக நிறைவேற்றப்படும்.

மேலும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லவும், நோயாளிகள் மருத்துவ சேவை பெற நகர் பகுதிக்கு வருவதற்கும், மலை பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் சிறு தானியங்கள், பழ வகைகள், தேன், காய்கறிகள், சந்தைபடுத்துவதற்கும், பீஞ்சமந்தை கிராமத்திற்கு முத்துகுமரன் மலை முதல் பீஞ்சமந்தை கிராமம் வரையிலான சாலை 6.55 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைத்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.