தற்போதைய செய்திகள்

கல்வியால் மட்டும்தான் சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு

திருச்சி

கல்வியால் மட்டும்தான் சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

திருச்சி ஜெ.ஜெ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருச்சி பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த 519 தனியார் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு தனியார் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

கல்வி ஒன்றுதான் சமூதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும் கல்வி கற்றால் உயர்ந்த நிலைக்கு வரமுடியும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். பட்டித்தொட்டியெல்லாம் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளிகளை உருவாக்கி கொடுத்தார். தொடர்ச்சியாக புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த மடிகணினி வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார்.

வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த மடிகணினியை கடைகோடி கிராமத்தில் உள்ள ஏழை-எளிய மாணவர்களும் கல்வியில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்ற நோக்கத்திலும், நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் மடிகணினியை வழங்கினார். அம்மா வழியில் ஆட்சி செய்யும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு மாணவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு எதை செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறது.

கல்வியால் மட்டுமே சமுதாயத்தை மேம்படுத்த முடியும் என்பதால் கழக அரசு கல்வித்துறைக்கு ரூபாய் 34,109 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் உயர்கல்விக்கு மட்டும் ரூபாய் 6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இந்த அரசு உறுதுணையாக உள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வில் வெற்றி பெற்று திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 மாணவர்கள் தேசிய தொழில் நுட்ப பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
கல்வித்துறையில் ஆசிரியர்கள் அல்லாத காலிப்பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக முதலமைச்சர் அறிவிப்பார்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி, கழக அமைப்புச்செயலாளர் டி.ரத்தினவேல், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகர், எம்.பரமேஸ்வரிமுருகன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அ.கருப்பசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி, சௌடாம்பிகா கல்விக்குழுமம் தலைவர் டாக்டர்.எஸ்.இராமமூர்த்தி, புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஷ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் தங்கமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.இந்திராகாந்தி மற்றும் தனியார் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆகிய பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.