தற்போதைய செய்திகள்

ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.4.12 கோடியில் புதிய கட்டடம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அடிக்கல்

தூத்துக்குடி

ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.4.12 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு ரூ.4.12 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் கட்டுமான பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, புதிய கட்டடம் கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1986-ம் ஆண்டு ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தை நிர்வாக ரிதியாக பிரித்து தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கினார். தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்படும்போது 7 வட்டாட்சியர் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 8-வது வட்டமாக எட்டயபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டமும், 9-வது வட்டமாக கயத்தாரை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டமும் ஏற்படுத்தப்பட்டது. முதலமைச்சர் அவர்கள் 22.11.2017 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது ஏரலை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அதனடிப்படையில் 10-வது வட்டமாக ஏரலை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 3 வட்டங்களையும் உருவாக்கியது கழக கழக அரசு தான்.

தரைத்தளம் 6350 சதுர அடி பரப்பிலும், முதல் தளம் 6350 சதுர அடி பரப்பிலும் என மொத்தம் 12700 சதுர அடி பரப்பில் வட்டாட்சியர் அலுவலகம், பதிவறை, கணினி அறை, வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம், எழுதுபொருள் அறை, ஆண், பெண், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை மற்றும் ரேம்ப் வசதியுடன் மிக எழிலோடும், நவீன வசதிகளோடு புதிய வட்டாட்சியர் அலுவலகம் உருவாக்கப்பட இருக்கிறது. வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடம் 966 சதுர அடி பரப்பில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி செயற்பொறியாளர் வெள்ளைசாமி, உதவி பொறியாளர் அருண்குமார், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வழக்கறிஞர் செல்வகுமார், மாவட்ட பனைவெல்ல சங்க தலைவர் தாமோதரன், ஒன்றியக்குழு தலைவர் வசந்தா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அழகேசன், முக்கிய பிரமுகர் ஆறுமுகநயினார், திருப்பாற்கடல், காசிராஜன், ராஜநாராயணன், விஜயகுமார், ராமச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.