தற்போதைய செய்திகள்

கிராமங்கள் ஏற்றம் பெற கழக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றம் – அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பெருமிதம்

தென்காசி

கிராமங்கள் ஏற்றம் பெற கழக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட வெள்ளாளன்குளம். கடம்பன்குளம் ஊராட்சியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கீ.சு.சமீரன் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி திறந்து வைத்து பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் வாழ்ந்து காட்டியவர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பள்ளிக்கல்வித்துறையில் எண்ணற்ற விலையில்லா நலத்திட்டங்களை மாணவச் செல்வங்களுக்காக வழங்கி தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிய புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கிராமப்புறங்கள் ஏற்றம் பெறுவதற்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்.

குடிமராமத்து திட்டத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் அனைத்து ஏரிகளும், வரத்துக் கால்வாய்களும், குளங்களும் தூர்வாரப்பட்டு முழுமையாக சீர்செய்யப்பட்டு இன்று கண் பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறது என்றால் அதற்கு காரணம் முதலமைச்சர் தான். அதுமட்டுமின்றி, அரசு பள்ளிகளில் பயின்று 7.5 சதவீகித உள் இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பிற்கான ஏழை, எளிய மாணவர்களின் எட்டாக்கனியாக இருந்த மருத்துவ கனவை நனவாக்கியவர் முதலமைச்சர் தான். இனிவரும் காலங்களிலும் முதலமைச்சர் தலைமையில் எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேசினார்.

இதனைத்தொடர்ந்து 20 தாய்மார்களுக்கு தலா ரூ.2000 மதிப்புள்ள அம்மா பரிசு நலப்பெட்டகத்தை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கலுசிவலிங்கம், சுகாதாரப்பணிகளின் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் இ.ரகுபதி, நெசவாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆறுமுகம், பேரங்காடி துணைத்தலைவர் இ.வேல்சாமி, முன்னாள் ஆவின் தலைவர் ரமேஷ் உட்பட வட்டார மருத்துவ அலுவலர் மதன்சுதாகர், சுகாதார அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.