தற்போதைய செய்திகள்

கரூர் போர் நினைவு சின்னம் ரூ.3.30 லடசத்தில் புதுப்பிப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

கரூர்

கரூரில் ரூ.3.30 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவு சின்னத்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூரில் வரலாற்று சிறப்புமிக்க போர் நினைவு சின்னம் அமைந்துள்ள இடம் கரூர் ரோட்ராக்ட் சங்கத்தின் சார்பில் ரூ.3.30 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தினை கரூர் மாவட்ட கழக செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமை வகித்தார்.

இதன் பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கரூர் மாவட்டம் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை உள்ளடக்கியதாகும். கி.பி. 1-ம் நாற்றாண்டில் சேர மன்னர்கள் கருவூரை ஆட்சி செய்தனர். சேர மன்னர்களின் கோட்டை கருவூரில் ஆன்பொருநை என்று அழைக்கப்படும் அமராவதி ஆற்றின் வடகரையில் அமைந்திருந்தது. கருவூர் நகரில் கோட்டைமேடு என்ற இடம் அமைந்துள்ளதும், அங்குள்ள கோயில் கோட்டைக் கோயில் என்றழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு தொல்லியல் துறை கருவூர் நகரிலும், ஆன்பொருநை (அமராவதி ) ஆற்றங்கரையிலும் மேற்கொண்ட அகழாய்வில் கோட்டைச் சுவர் இருந்ததுய் கண்டறியப்பட்டுள்ளது. அக்கோட்டை சுவர் செங்கற்கள் கருவூர் சேரர் அகழ்வைப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கருவூரிலிருந்த அக்கோட்டை கி.பி.18-ம் நூற்றாண்டில் திப்பு சுல்தான் ஆளுகைக்குட்பட்டிருந்தது.

கி.பி. 1800-ல் புக்கானன் கருவூர் பகுதிக்கு வந்தபொழுது தாராபுரத்தில் ஆட்சி செய்த மேஜர் மேக்லியட் என்ற ஆங்கிலேயரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக கருவூர் விளங்கியது. ஆங்கிலேய குதிரைப் படையொன்று கருவூர் கோட்டையை காவல் புரிந்தது. கி.பி.1780 முதல் 1784 வரை நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரின் ஒரு பகுதியாக கருவூரிலும் போர் நடைபெற்றது.

கி.பி. 1783-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திப்பு சுல்தான் ஆளுகைக்குட்பட்டிருந்த கருவூர் கோட்டையை கைப்பற்றுவதற்காக, ஆங்கிலேயர் கருவூர் மீது போர் தொடுத்தனர். இந்த போரின் இறுதியில் கருவூர் கோட்டை ஆங்கிலேயர் வசமானது. அப்போரில் படைப்பிரிவு தலைவர் ஒருவரும், 19 ஐரோப்பியர்களும் கொல்லப்பட்டதாகவும், 30 போர் வீரர்கள் படுகாயமுற்றதாகவும் வரலாறு கூறப்படுகிறது. இந்த கருவூர் கோட்டையை கைப்பற்றியதை நினைவு கூரும் வகையிலும், இறந்த போர் வீரர்களின் நினைவாகவும் தாந்தோன்றி மலைக்கு அருகில் ராயனூரில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க போர் நினைவுத்தூண் தற்போது நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரூர் ரோட்ராக்ட் சங்கத்தினர் சார்பில் ரூ.3.30 லட்சம் மதிப்பில் இந்த இடம் புனரமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு கல்வெட்டும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.கே.ஜெயராஜ், கரூர் வட்டாட்சியர் செந்தில், நகராட்சி பொறியாளர் நக்கீரன், கூட்டுறவு சங்கப் பிரதிநிதி சு.மல்லிகா, ரோட்ராக்ட் சங்கத்தின் தலைவர் ஆர்.சபரிஸ், செயலர் செல்வகுமார், பொருளாளர் பரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.