சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

தோல்வி பயத்தில் ஸ்டாலின் பொய்களை அள்ளி வீசுகிறார் கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை

தோல்வி பயத்தில் ஸ்டாலின் பொய்களை அள்ளி வீசுகிறார் என்று கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை மாவட்ட கழக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் ஆயுத பூஜை விழா நடைபெற்றது. இதில் கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு கழக நிர்வாகிகளோடு ஆயுதபூஜையை கொண்டாடினார்.

அப்போது கழக வழிகாட்டுதல் குழுவில் நியமிக்கப்பட்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி, மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.சசிக்குமார் தலைமையில் வீரவாள் பரிசளிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கே.கே.சக்திவேல் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதன் பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அற்புதமான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நன்றாக ஆட்சி செய்து வருகிறார். விவசாயி என்று சொல்கின்ற தகுதி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு உள்ளது. அவர் உண்மையான விவசாயி. ஸ்டாலின் போல் கரும்பு காட்டுக்குள் கான்கிரீட் போட்டு நடந்து செல்வது இல்லை. விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்னென்ன திட்டங்கள் தேவையோ, விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிந்து நிறைவேற்றி வருகிறார்.

கரிகால் சோழன் காலத்தில் இருந்த குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் கொண்டு வந்ததால் அனைத்து ஏரிகள் மற்றும் குளங்களிலும் கூடுதலாக தண்ணீர் நிறைந்துள்ளது. இன்றைக்கு மேட்டூர் அணையில் 100 அடி தண்ணீர் உள்ளது. இயற்கையே தமிழக முதல்வருக்கு துணையாக நிற்கிறது.வரும் 2021 சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி என்று எப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தாரோ அன்றைக்கே ஸ்டாலின் ‘நமக்கு வேலை ஆகாது” என்று முடிவு செய்து விட்டார்.

முக.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் பொய்களை வாரி வீசி கொண்டிருக்கிறார். கொரோனா காலத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று தடுப்பு நடவடிக்கைகளையும், திட்டங்களையும் ஆய்வு செய்து எந்த சூழ்நிலையிலும் மக்களுக்காகவே இயங்கிக் கொண்டிருக்கிறார். 2021-ல் மீண்டும் எடப்பாடி கே.பழனிசாமி தமிழக முதலமைச்சராவது உறுதி.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.