தற்போதைய செய்திகள்

தி.மு.க.வுக்கு, இளைஞர்கள் தக்கபாடம் புகட்டுவார்கள் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

மதுரை

வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு இளைஞர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை மாநகர் மாவட்டம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட மேற்கு 1-வது பகுதி இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் ஜெய்ஹிந்துபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் இரா அரவிந்தன் தலைமை தாங்கினார். 89-வது வட்ட கழக செயலாளர் சரவணன், பகுதி இளைஞர் பாசறை செயலாளர் சங்கர், வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கழகம் 48 ஆண்டுகள் வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் மக்கள் சேவை செய்து 49-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அடுத்த ஆண்டு வெள்ளி விழா காண இருக்கிறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். 48 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி கழகம். இந்த இயக்கம் ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கமாக உள்ளது. பெண்கள் சமுதாயத்திற்காக தொலைநோக்கு திட்டங்களை அம்மா வகுத்து தந்துள்ளார்.

தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், படிக்கும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி திட்டம் என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இலவச மடிகணினி திட்டம் மூலம் இதுவரை 60 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். முதியோர் ஓய்வூதியம் தி.மு.க ஆட்சியில் 500 ரூபாயாக இருந்ததை ரூ.1000 மாக உயர்த்தி அம்மா வழங்கினார். இதனால் 35லட்சம் முதியோர் பயன் அடைந்து வருகிறார்கள்.

புரட்சித் தலைவரை பார்த்து நடிகர் அரசாள முடியாது என்று கருணாநிதி கேலி, கிண்டலும் செய்தார். அந்த கருணாநிதி யை சுமார் 11 ஆண்டுகள் கோட்டை பக்கமே வரவிடாமல் செய்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.. திமுக ஆட்சியில் காவு கொடுக்கப் பட்ட முல்லைப் பெரியாறு, காவேரி பிரச்சினையில். சட்டப்படி போராடி வெற்றி பெற்று தமிழகத்தின் இழந்த உரிமையை மீட்டுத் தந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

மதுரை வளர்ச்சிக்காக வைகை ஆறு தூய்மை படுத்தப்பட்டு வருகிறது. சிறுவர். சிறுமியர் விளையாடுவதற்கு பார்க், ஜிம் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கோரிப் பாளையத்தில் உயர் மட்ட பாலம் கட்டப்படும். இது எல்லாமே அம்மாவின் ஆட்சியின் சாதனைகள் ஆகும்.இதையெல்லாம் நீங்கள் வீடுவீடாக எடுத்து சொல்ல வேண்டும். அம்மா அரசின் மீது இளைஞர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழகப் பொருளாளர் ராஜா, கழக செய்தி தொடர்பாளர் அண்ணாதுரை, முன்னாள் துணை மேயர் திரவியம் மற்றும் மாவட்ட இளைஞர் பாசறை நிர்வாகிகள் செந்தில்குமார், சாயி, பாலமுருகன், விநாயகமூர்த்தி, சிலம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.