தமிழகம் தற்போதைய செய்திகள்

கால்நடை பராமரிப்பு பணியில் ஈரோடு முன்னோடி மாவட்டம் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதம்

ஈரோடு

கால்நடை பராமரிப்பு பணியில் ஈரோடு மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதத்துடன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒலகடம் அம்மாபேட்டை, நெரிஞ்சிபேட்டை ஆகிய பகுதிகளில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் 1,646 பெண்களுக்கு ரூ.40.35 லட்சம் மதிப்பீட்டில் தலா 25 விலையில்லா அசில் இன நாட்டு கோழி குஞ்சுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத வகையில், கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி, கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தலா 25 நாட்டுக்கோழிகள், தலா 4 வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் கால்நடை பராமரிப்புப் பணியில் முன்னோடி மாவட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது.

கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் புறக்கடை கோழி வளர்ப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த பட்ச முதலீட்டில் கிராம மக்கள் தொன்று தொட்டு தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள கிராமப்புற புறக்கடை கோழி வளர்ப்பை வாழ்கையின் அங்கமாக கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலமாக ஏழ்மை நிலையிலுள்ள 16,650 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கோழிவளர்ப்பு பற்றிய 1 நாள் பயிற்சி அளிக்கப்பட்டு, பயிற்சி கட்டணமாக ரூ.150 வழங்கப்படுகிறது. அதன் பின் அவர்களுக்கு ரூ.2,045 மதிப்பீட்டிலான 4 வார வயதுடைய தலா 25 அசில் நாட்டு இன கோழிக்குஞ்சுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.பி. என்.ஆர்.கோவிந்தராஜர், பவானி நகர செயலாளர் என்.கிருஷ்ணராஜ், கழக பொதுக்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சரவண பவா, பேரவை செயலாளர் ராதா, தெற்கு ஒன்றிய செயலாளர் மேகநாதன், மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைத்தலைவர் கோபால் (எ) துரைசாமி, ஒலகடம் முத்துசாமி, அம்மாப்பேட்டை தெற்கு ஒன்றிய துணை செயலாளர் பங்க்பாலு, அவைத்தலைவர் சசி (எ) இளங்கோ, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கவின் பெருமாள், மகளிரணி செயலாளர் சுகுணா, அம்மா பேரவை செயலாளர் பி.ஜி.முனியப்பன், வாத்தியார் குப்புசாமி, அம்மாப்பேட்டை ராஜி, செந்தில்குமார், ஈஸ்வரமூர்த்தி, சந்திரசேகரன், மாரியப்பன், மலர்க்கொடி, சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.