சிறப்பு செய்திகள்

கொரோனா நோயை கட்டுப்படுத்திய பெருமை தமிழக டாக்டர்களை சாரும் – முதலமைச்சர் பாராட்டு

சென்னை

கொரோனா நோயை கட்டுப்படுத்திய பெருமை தமிழக டாக்டர்களை சாரும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் Fortis Health Care நிறுவனத்தின் புதிய மருத்துவமனையைத் திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

சமீபத்தில் கொரோனா நோய்த் தொற்றின் பரவலை, மருத்துவத்துறையில் முன்னேறிய நாடுகள் என்று சொல்லப்பட்ட மேலை நாடுகளைவிட, குறுகிய காலத்தில் அதிகமாக கட்டுப்படுத்தி, மக்களைக் காப்பாற்றியது நமது நாட்டு மருத்துவர்கள்தான் என்பது நமக்கெல்லாம் பெருமை.மாநிலத்தில் உள்ள மிகவும் ஏழையான ஒரு நோயாளிக்கு எத்தகைய மருத்துவ சிகிச்சை கிடைக்கின்றது என்பதைப் பொறுத்தே மாநிலத்தின் முழு சுகாதாரம் அளவிடப்படுகிறது.

எனவே, ஏழை, எளிய மக்களுக்கு உயரிய சிகிச்சைகள் தேவைப்பட்டு, அவர்கள் தனியார் மருத்துவமனைகளை அணுக வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்ற, மாண்புமிகு அம்மாவின் அரசு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பொறுப்பை நிறைவேற்றும்பொழுது, சம்பந்தப்பட்ட நோயாளிக்கு ஏற்படும் புன்னகையில் உங்களுக்கு மன நிறைவு கிடைக்கும்.

இதைத்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பேன் என்றார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள Fortis நிறுவனத்தின் வடபழனி மருத்துவமனை, மக்களுக்கு சிறந்த தரமான மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.