சிறப்பு செய்திகள்

சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து துணை முதலமைச்சர் தண்ணீர் திறப்பு

தேனி

சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து முதல்போக சாகுபடிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து விட்டார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக சாகுபடிக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் முன்னிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீரை திறந்து வைத்தார்.

பின்னர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தமிழக அரசின் உத்தரவின்படி, தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தென்கரை கிராமம், வராகநதி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து, விவசாயிகளின் நலன் கருதி பாசனத்திற்காகவும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்காகவும், இன்றைய தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் 1825 ஏக்கர் பழைய நன்செய் பாசன நிலங்களும், 1040 ஏக்கர் புதிய புன்செய் பாசன நிலங்களும், என மொத்தம் 2865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதில், முதல்போக சாகுபடிக்காக 26.10.2020 முதல் 15.12.2020 வரை வினாடிக்கு 51 நாட்களுக்கு 30 கனஅடி வீதமும், 16.12.2020 முதல் 15.01.2021 வரை 31 நாட்களுக்கு வினாடிக்கு 27 கனஅடி வீதமும், 16.01.2021 முதல் 15.03.2021 வரை 59 நாட்களுக்கு வினாடிக்கு 25 கனஅடி வீதமும் ஆக மொத்தம் 141 நாட்களுக்கு 331.95 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும், நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினைப் பொறுத்து, தண்ணீர் திறந்து விடப்படும்.

பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட தென்கரை, லட்சுமிபுரம், தாமரைக்குளம், ஆகிய கிராமங்கள் பாசன வசதிக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, வேளாண் பெருங்குடி மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், பெரியகுளம் சார் ஆட்சியர் செல்வி டி.சிநேகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) தாக்ரே சுபம், பொதுப்பணித்துறை, (மஞ்சளாறு வடிநிலக்கோட்டம்) செயற்பொறியாளர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரிதா, உதவி செயற்பொற்யாளர் ரமேஷ், உதவி பொறியாளர் முருகேசன், பெரியகுளம் வட்டாட்சியர் ரத்தினமாலா மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.