தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளை மாணவர்கள் தேடி வரசெய்தவர் எடப்பாடியார் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பெருமிதம்

தூத்துக்குடி

தனியார் பள்ளிகளை மாணவர்கள் தேடி சென்ற நிலையை மாற்றி அரசு பள்ளிகளை தேடி வரச்செய்தவர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பெருமிதத்துடன் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் நேஷனல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழாவில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது: –

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் வந்த தமிழக அரசு தொடர்ந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கல்வித்துறை அமைச்சர் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெறப்பட்டு புதிய சகாப்தத்தை உருவாக்கியவர். மாற்றுச்சிந்தனை உள்ள பல்வேறு ஊடகங்களும் பாராட்டும் வகையில் கல்வித்தரத்தை இந்திய துணைக்கண்டமே பாராட்டும் வகையில் உயர்த்தி உள்ளார்.

நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர் நீட்டிப்பு ஆணைகளை பெற சென்னைக்கு சென்று நீட்டிப்பு ஆணை பெறுவதில் பல்வேறு சிரமங்களை போக்கும் வகையில் தேடிவந்து அவர்கள் இருக்கும் பகுதியிலேயே இந்த உத்தரவுகளை வழங்கி வருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2900 நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கு தொடர் ஆணைகளை நேரில் சென்று வழங்கி வருகிறார்.

நீட்தேர்வு உச்சநீதிமன்றதால் கட்டாயமாக்கப்பட்ட போதிலும் தமிழகம் முழுவதும் நீட் பயிற்சியை இலவசமாக வழங்கினார். மேலும் ஸ்மார்ட் வகுப்புகளை உருவாக்கியதுடன் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு நிகராக புதிய பாடத்திட்டத்தையும் கொண்டு வந்தார். தனியார் பள்ளிகளை மாணவர்கள் தேடி சென்ற நிலையை மாற்றி அரசு பள்ளிகளை தேடி வரச் செய்தவர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ இடஒதுக்கீட்டில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராகும் நிலையை அரசு உருவாக்கியுள்ளது. நமது மாவட்டத்திலும் 11 மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்துள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.