சிறப்பு செய்திகள்

இந்தியாவின் மருத்துவ தலைநகரம் தமிழகம் – முதலமைச்சர் பெருமிதம்

சென்னை

சென்னை வடபழனியில் Fortis Health Care நிறுவனத்தின் புதிய மருத்துவமனையைத் திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நோயை ஆராய்ந்து, நோய்க்கான காரணத்தை ஆராய்ந்து, நோயை தீர்க்கும் வழிகளை ஆராய்ந்து, நோயாளியின் உடலுக்கு ஏற்றவாறு மருத்துவம் செய்வதே சிறந்தது என்று மருத்துவப் பணி எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தைத் தந்தவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர் .

Fortis Health Care நிறுவனம், இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவமனைகளை நிறுவி, மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்கி வருவது பாராட்டுக்குரியது. சென்னை அடையாறில் இந்த நிறுவனத்தின் மருத்துவமனை ஏற்கனவே இயங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது வடபழனியில் அனைத்து நவீன வசதிகளும் கொண்ட ஒரு புதிய மருத்துவமனையைத் தொடங்கியிருப்பது, தமிழ்நாடு, இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று அழைக்கப்படுவதை மேலும் வலுவாக்குவதாக அமைந்துள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

மக்கள் நம் பக்கம் இருக்கின்றார்களா என்பதை விட மக்களின் பக்கம் நாம் இருக்கிறோமா என்பதே எப்போதும் என்னுடைய சிந்தனையாக இருக்கிறது. என்னை நம்புகின்ற மக்களுக்கு என்னென்ன வழிகளில் எல்லாம் நன்மை செய்ய இயலுமோ அந்த வழிகளைப் பற்றியே நான் சதா சர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் மக்களாகிய நீங்கள் எப்பொழுதுமே என் பக்கம் இருக்கிறீர்கள் என்றார் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

இதய தெய்வம் அம்மா அவர்களின் வழியில் செயல்படும் அம்மாவின் அரசும், அனைவருக்கும் உயர்தர மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் மிகச் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதனால்தான், இந்தியாவிலேயே தமிழ்நாடு மருத்துவத் துறையில் ஒரு முன்னோடி மாநிலமாக இன்றையதினம் விளங்கி வருகிறது.

நலமான மாநிலமே, வளமான மாநிலம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்தல், தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகள் அளித்தல் போன்ற பல முன்னோடித் திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றேன்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், வளர் இளம் பெண்களுக்கான சுகாதாரத் திட்டம், பிரசவ உடனாளர் திட்டம், அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம், அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவித் திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் மகளிருக்கான அம்மா மகளிர் முழு உடல் பரிசோதனை திட்டம், நடமாடும் மருத்துவமனை திட்டம், அம்மா மருந்தகம் போன்ற தடுப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளிக்கும் திட்டம், உயர்நிலை மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், 108 அவசர கால ஊர்தி சேவை, இரத்த வங்கிகள், விபத்து சேவை மையங்ளுடன் கூடிய உயர் சிறப்பு மருத்துவமனைகளை நிறுவுதல் போன்ற பல முன்னோடி திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது.

11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படும் சிமாங்க் மையங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.தாய்சேய் நலப் பிரிவுகள் ஒப்புயர்வு மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரண்டு பேறுகாலம் வரை 18,000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவது இத்திட்டத்தின் வெற்றியை காட்டுகிறது.

கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 16ல் இருந்து 15 ஆகவும், பேறுகாலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரையில், 2030-ல் அடைய வேண்டிய நீடித்த நிலையான இலக்குகளை இப்போதே அடைந்து விட்டோம் என்பது ஒரு சரித்திர சாதனையாகும். அம்மாவின் ஆட்சியில், 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. 30 படுக்கை வசதி, ஸ்கேன் போன்ற வசதிகளுடன் 166 ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிலை உயர்த்தப்பட்டுள்ளன.இதன் தொடர்ச்சியாக, 32 ஆரம்ப சுகாதார நிலையங்களில், நவீன இணையவழி கண் பரிசோதனை மையங்கள், மாவட்டத்திற்கு ஒன்று வீதம், ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளுக்கு

56 சி.டி.ஸ்கேன், 22 எம்.ஆர்.ஐ. ஸ்கேன், 18 கேத்லேப் மற்றும் 530 டயாலிசிஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு அரசு, அரசு மருத்துவமனைகளில் புற்று நோய்க்கு உயரிய சிகிச்சை அளிக்கும் வகையில் 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 அரசு மருத்துவமனைகளில் Linear Accelerator என்ற உயர் தொழில் நுட்பக் கருவி நிறுவப்பட்டு வருகிறது.

சென்னை அடையாறு, புற்றுநோய் மையத்தை 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அளவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தும் பணி, நிறைவடையும் தருவாயில் உள்ளது.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு புற்றுநோய் மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.காஞ்சிபுரம், காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேன்மைமிகு மையம் ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு 5 வருடங்களாக தொடர்ந்து தேசிய அளவில் மிகச் சிறந்த மாநில விருதைப் பெற்று வருகிறது. உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மருத்துவமனைக்கான விருது, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.தேசிய தர உறுதி திட்டத்தின் கீழ், சிறந்த செயல்பாடுகளுக்காக தமிழ்நாட்டில் உள்ள 26 அரசு மருத்துவமனைகள் மற்றும் 47 ஆரம்ப சுகாதார நிலையங்களும் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசால் பாராட்டு சான்றிதழும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளன.

உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் மட்டுமல்லாது, மிகச் சிறந்த மனித வளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்தித் தருவதிலும், தமிழ்நாடு இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்து வருகின்ற காரணத்தினால், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்குகின்றது.

மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை அளிப்பதில், அரசு மருத்துவமனைகளோடு, தனியார் மருத்துவமனைகளும் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இன்றைக்கு தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் பெறுவதற்காக, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். இதன் மூலம், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.