மதுரை

சட்டமன்ற தேர்தலில் திமுகவை `டெபாசிட்’ இழக்க செய்வோம் – வி.வி.ராஜன்செல்லப்பா சபதம்

மதுரை

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்வோம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சபதம் மேற்கொண்டார்.

மதுரை கிழக்கு தொகுதியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை கிழக்கு (வடக்கு) ஒன்றிய கழக செயலாளர் தக்கார் பாண்டி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ் முன்னிலை வகித்தார். மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழக செயலாளர் கணேசன், வண்டியூர் பகுதி கழக செயலாளர் ஆர்.செந்தில்குமார் ஆகியோர் வரவேற்று பேசினர்.

கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

வருகின்ற தேர்தல் மிகவும் சவாலானது என்பதால் நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும். மக்கள் நமக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். எனவே திமுகவினர் ஏதாவது கோல்மால் செய்து வாக்காளர்களை திசை திருப்புவார்கள். அதை நீங்கள் முறியடிக்க வேண்டும். மக்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும்.

இந்த தொகுதி என்பது திமுக உறுப்பினர் தொகுதி. ஆனால் ஆவர் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனால் நமது முதலமைச்சர் இந்த தொகுதி மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை தாயுள்ளத்தோடு வழங்கியுள்ளார். இதையெல்லாம் நீங்கள் மக்களிடம் எடுத்துக் கூறி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவை டெபாசிட் இழக்க செய்திடும் வகையில் செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

இக்கூட்டத்தில் திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், திருப்பரங்குன்றம் கிழக்கு பகுதி கழக துணை செயலாளர் செல்வகுமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கள்ளந்திரி சேகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயபால், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் பி.புருஷோத்தமன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் டி ராஜேந்திரன், தேன் சுகுமார் மற்றும் கார்த்திகேயன், அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.