தற்போதைய செய்திகள்

மதுரை மேற்கு தொகுதியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்

மதுரை

மதுரை மேற்கு தொகுதியில் உள்ள ஊராட்சியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தினை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், கீழமாத்தூர் ஊராட்சியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்து பேசியதாவது:-

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 2021 வீடுகளுக்கு 55 லிட்டர் தண்ணீர் வழங்கும் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 296 வீடுகளுக்கு இணைப்பு தரப்படும். மதுரை மாவட்டத்தை பொருத்தவரை இத்திட்டத்தின் மூலம் 5 லட்சம் வீடுகள் பயன்பெறும் முதல் கட்டமாக 97,959 வீடுகளுக்கு இணைப்பு பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

கீழமாத்தூர் பகுதியில் 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தொட்டி சேதமடைந்துள்ளது அதனை சரிசெய்ய ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.6 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம், ரூ.5 லட்சம் மதிப்பில் நிழல் குடை அமைக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. கீழமாத்தூர் அருகே ரூ.2 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொடிமங்கலம் பகுதியில் ரூ.17 கோடியே 40 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடிந்தால் துவரிமான், கொடிமங்கலம், மாடக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும்.

ஆரப்பாளையம் பகுதியில் நிலத்தடி நீர் செறிவூட்டும் பணிக்கு 15 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட உள்ளது. தமிழகத்தில் செயல்படும் திட்டங்கள் எல்லாம் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறது.விவசாய மக்களின் வாழ்க்கையில் வளம் சேர்க்கும் விதமாக இரண்டாம் பசுமைப் புரட்சியை உருவாக்கிட இதுவரை ரூ.84 ஆயிரம் கோடி அளவில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி உதவி இயக்குநர் செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், கழக இளைஞர் அணி இணை செயலாளர் கிரம்மர் சுரேஷ், பரவை பேரூர் கழக செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.