தற்போதைய செய்திகள்

தென் மாவட்டங்களுக்கு வருகை தரும் முதல்வர்- துணை முதல்வருக்கு மதுரையில் எழுச்சிமிகு வரவேற்பு : கழக அம்மா பேரவை முடிவு

மதுரை

தென்மாவட்டங்களுக்கு வருகை தரும் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு மதுரையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க கழக அம்மா பேரவை மற்றும் புறநகர் மேற்கு மாவட்ட கழகம் முடிவு செய்துள்ளது.

கழக அம்மா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் தென்மாவட்டங்களுக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை திருமங்கலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.

இதில் 29-ந்தேதி தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணி ஆய்வு கூட்டங்களை மேற்கொண்டு, மக்களுக்கு ஆறுதல் கூறி பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர்.அதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பசும்பொன் தேவர் திருமகனார் குருபூஜையில் பங்கேற்க 30-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று மரியாதை செலுத்துகின்றனர். தென் மாவட்டங்களுக்கு வருகை தரும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு கழக அம்மா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கழக அரசு மீது மாணவர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. வாரிசு என்ற அடையாள அட்டையை கொண்டு கழகத்தில் பதவி தருவது கிடையாது, அதிகமான இளைஞர்களை சட்டப்பேரவையில் கொண்டது கழகம் மட்டும் தான். இளைஞர்களுக்கு அட்சய பாத்திரம் போல் அள்ளி அள்ளி வாய்ப்புகளை தருகிற ஒரே இயக்கமாக கழகம் உள்ளது.
10 ஆண்டு காலமாக கோட்டை பக்கம் வராமல் அதிகார பசியோடு திமுகவினர் உள்ளனர். திமுகவின் காட்டு தர்பார், குடும்ப அதிகாரம், அதிகார துஷ்பிரயோகம், நில அபகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீரழிவு, மின்தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை மக்கள் மறந்துவிட மாட்டார்கள். திமுக ஆட்சியின் அவலங்கள் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது. தேர்தலில் நிச்சயம் தி.மு.க.வுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் கே.மாணிக்கம் எம்.எல்.ஏ., உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி, மாவட்ட கழக நிர்வாகிகள் திருப்பதி, பஞ்சம்மாள், பஞ்சவர்ணம், ஒன்றிய கழக செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், ரவிச்சந்திரன், பிச்சை ராஜன், செல்லம்பட்டி ராஜா, நகர செயலாளர் பூமா ராஜா, பேரூர் கழக செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்ரமணி, கொரியர் கணேசன், மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், காசிமாயன், லட்சுமி, வக்கீல் தமிழ்ச்செல்வன், சிங்கராஜ பாண்டியன், சரவணன், மகேந்திர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.