தற்போதைய செய்திகள்

பொருந்தாத கருத்துகளை கூறி பொதுமக்களை குழப்புவதா? நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கண்டனம்

தூத்துக்குடி

பொருந்தாத கருத்துகளை கூறி மக்களை குழப்பக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபத்ர காளியம்மன் மற்றும் வீர விநாயகர் கோயில்களின் கும்பாபிஷேக விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நடிகர் கமலஹாசன் வார்த்தைக்கு பொருந்தாத கருத்துக்களை தற்போது கூறி வருகிறார். கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்ததும் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆனால் வெளியே வராமல் வீட்டிலேயே இருக்கும் நடிகர் கமல்ஹாசன் முதலமைச்சரின் சிறப்பான செயல்பாடுகளை வரவேற்க வேண்டுமே தவிர அதை விடுத்து அரசியல் லாபத்திற்காக மக்களை குழப்பக்கூடாது.தற்போது அவர் கூறும் கருத்துக்களும், ரைமிங்கா பேசுவதும் சினிமாவுக்கு வேண்டுமென்றால் நன்றாக இருக்கும். ஆனால் அரசியலுக்கு அது நன்றாக இருக்காது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் நீலகண்டன், கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் அம்பிகா வேலுமணி, கோவில்பட்டி நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.