சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளதயார் நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு

சென்னை

பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டம், அம்ரூத் திட்டம், பிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டம், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம், நகர்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம், ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டுத் திட்டம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட வங்கி கடன் இணைப்பு, அம்மா இருசக்கர வாகனத் திட்டம் போன்ற திட்டப்பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார்.

வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்தல் போன்ற பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.