சிறப்பு செய்திகள்

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படைக்கு அமைச்சர் கடும் கண்டனம்

சென்னை

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆழ்கடல் செல்லும் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசியை அளித்து வருகிறோம்.முதலமைச்சரால் திறக்கப்பட்ட நவீன மீன்பிடி அங்காடி அம்மாவின் ஆட்சிக் காலத்தில் 100 கோடி அளவுக்கு பணிகள் நடைபெற்றது.இட நெருக்கடி காரணமாக திருவெற்றியூரில் ரூ 250 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் உருவாக்கப்பட்டு வருகிறது.இந்த பணிகள் இன்னும் ஒரு வருடத்தில் முடிவடையும்.இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகும்.திமுக ஆட்சிக் காலத்தில் மீன்வளத்துறைக்கு ஆண்டுக்கு ரூ 200 கோடி ஒதுக்குவார்கள்.

ஆனால் தற்போது கிட்டதட்ட ரூ 1000 கோடிக்கு மேல் நிதியை ஒதுக்கி பணிகள் நடைபெறுகிறது. எந்த அளவுக்குக் கழக ஆட்சி முக்கியத்துவம் அளிக்கிறது என்பது இதன் மூலம் தெரியவரும்.பெரிய மீன்பிடி துறை முகங்கள்,சிறிய மீன்பிடி துறை முகங்கள்,மீன் வலைக்கூடம்,போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது.சென்னை துறைமுகத்தில் மீன் ஏலம் விடுபவர்கள் கடந்த காலங்களில் மழையில் நனைத்து,கடல்நீரில் கால்களை வைப்பதினால் அவர்களுடைய கால்களில் புண் ஏற்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளது.ஆனால் தற்போது முதலமைச்சர் திறந்துவைத்த புதிய மீன்பிடி துறைமுகம் நவீன வசதிகளுடன் வெளிநாடுகளில் இருப்பதுபோன்ற நிலையை ஏற்படுத்தித் தந்துள்ளோம்.

சொல்வது மட்டுமல்லாமல்,சொல்லாததையும் செய்யக்கூடியது அம்மாவின் அரசுதான். தீபாவளி வருகிறது.மீன்பிடி குறைவு காலத்தில் ரூ 5 ஆயிரம்,சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஆண்களுக்கு ரூ 4,500 பெண்களுக்கு ரூ 4,500 தருகிறோம். இதுபோன்று நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான்.இதனையும் கழக ஆட்சிதான் செய்துவருகிறது.உள்நாட்டு மீனவர்கள் மற்றும் கடலோர மீனவர்களின் நலன்காக்கும் அரசாக அம்மாவின் அரசு உள்ளது.இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் காயமடைந்துள்ளது தொடர்பான கேள்விக்கு மீனவர்கள் தாக்குபடுவது குறித்து ஏற்கனவே கண்டனத்தை தெரிவித்துள்ளோம்.இந்த தாக்குதல் சம்பவத்தை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.இது தொடர்பாக வெளியுறவுத்துறை உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.இந்த விஷயத்தில் எங்களுடைய கண்டனத்தை தெரிவிக்கிறோம்.இலங்கை அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுப்படக்கூடாது.

நம்முடைய மீனவர்கள் வேண்டுமென்றே திசை மாறி செல்வது கிடையாது. காற்றின் வேகம்,அலையின் நீரோட்டம் காரணமாக எல்லை தாண்டும் நிகழ்வு ஏற்படும்.இதுபோன்ற சமயங்களில் நம்முடைய கடற்படையில் ஒப்படைப்பதுதான் நியாயமானது. அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.என்றார்.தொடர்ந்து செய்தியாளர்கள் 50 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு தொடர்பாகக் கேள்வி எழுப்பினர்.இதற்கு அமைச்சர் எங்களை பொறுத்தவரையில் கட்சி ரீதியாகவும்,ஆட்சி ரீதியாகவும் நாங்கள்தான் நீதிமன்றத்தை நாடினோம்.நல்ல தீர்ப்பைப் பெற்றோம்.உயர்நீதிமன்ற அறிவுரையின்படி குழுவை அமைத்தோம்.

உச்சநீதிமன்றத்திற்கும் நாங்கதான் சென்றோம். உச்சநீதிமன்றம் இந்த வருடம் வழி இல்லை என்று தெரிவித்துள்ளது.இது குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை செய்து உரிய முடிவை அரசு அறிவிக்கும்.7.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் ஆளுநரை சந்தித்து அழுத்தம் அளித்துள்ளார்.இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் ஏதாவது கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டு வந்ததா.எதுவும் செய்யவில்லை.

சட்டமன்றத்தில் தூங்கிவிட்டார்கள்.முதலமைச்சர் அளித்த அழுத்தம் காரணமாக இதில் நல்ல முடிவு வரும் என்ற காரணத்தினால் தேர்தல் கால அரசியல் நாடகத்தை திமுக செய்கிறது. அவர்கள் எப்படி உருண்டு, புரண்டாலும் இந்த சட்டத்தைக் கொண்டுவந்தது அம்மாவின் அரசு என்பது மக்களுக்குத் தெரியும். எப்படி திசை திரும்பினாலும் அவர்களின் கனவு பலிக்காது.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.