தற்போதைய செய்திகள்

கட்டட அங்கீகாரம் பெற்றால் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர உரிமை வழங்க நடவடிக்கை – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி

தூத்துக்குடி

கட்டட அங்கீகாரம் பெற்றால் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர உரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் நேஷனல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் ஆணை வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட கழக செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ, விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி வரவேற்றோர்.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 358 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஏழை, எளிய மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக சத்துணவு திட்டம் தந்து சரித்திரம் படைத்தவர். அடித்தட்டு மக்களின் பசியை களைந்தவர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கல்வி வளர்ச்சிக்காக செய்த திட்டங்களால் 78 சதவீத மாணவர்கள் படிக்க வருகை தந்த மாநிலம் என்ற பெருமை பெற்றது. மேலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எந்த மாநிலத்திலும் இல்லாத மடிகணினி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்து 57,47,000 மடிகணினிகளை வழங்கி சாதனை படைத்துள்ளார்.

பள்ளிகளுக்கு மாணவர்கள் சிரமம் இன்றி வர விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். தற்போது தமிழக மணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கே முன்னுதாரணமாக உள்ளது. தமிழக பிளஸ்1, பிளஸ்2 பாடத்திட்டத்தை டெல்லி ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயில்பவர்களும் பெற்று பயன்படுத்தும் நிலை உள்ளது. கடந்த ஆண்டு நீட்தேர்வு வினாத்தாளில் 172 கேள்விகள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் உள்ளது. அத்தனை சிறப்பு பெற்ற பாடத்திட்டமாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர் நீட்டிப்பு ஆணை பெறும் இடர்பாடுகளை களைந்து அவர்கள் இருக்கும் பகுதிக்கே வந்து இந்த ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நீட்டிப்பினை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக உயர்த்தும் திட்டமும் நடவடிக்கையில் உள்ளது.

அரசு சார்பு பள்ளிகளுக்கான நிதி உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள் கட்டிட அங்கீகாரம் பெற்றால் உடனடியாக அவர்களுக்கு நிரந்தர உரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 3000 பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆணைகள் வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகளின் தரம் இல்லை என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது. மருத்துவ இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவித இட ஒதுக்கீட்டினை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கொண்டு வந்ததால் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் இந்த ஆண்டில் சேர்ந்து சரித்திர சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.