தற்போதைய செய்திகள்

ஒரத்தநாடு கால்நடை மருத்துவ பல்கலை.யில் வளர்ச்சி கொள்கைகுழு துணைத்தலைவர் ஆய்வு

சென்னை

தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத்தலைவர் சி.பொன்னையன் ஒரத்தநாடு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து தமிழ்நாடு புத்தாக்கத் திட்டத்தின் நிதி உதவியுடன் செயல்படும் திட்டங்களை ஆய்வு செய்தார்.

இத்திட்டத்தின் கீழ் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படும் இனவழி கால்நடை மூலிகை மருத்துவப்பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தினால் உருவாக்கப்பட்ட மூலிகை மருந்துப் பொருட்கள் மற்றும் மூலிகைத் தாவரங்களை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், கால்நடை மூலிகை மருத்துவ முறைகளை கால்நடை வளர்ப்போரிடையே பிரபலப்படுத்துவதற்கென இத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பிரச்சார வாகனத்தையும் பார்வையிட்டார். இம்மூலிகைத் திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் வ.ரங்கநாதன் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மூலிகை மருத்துவத்தின் சிறப்பம்சங்கள் பற்றி விளக்கினார்.

இத்திட்டத்தின் செயல்பாடுகளை துணைத்தலைவர் சி.பொன்னையன் வெகுவாகப் பாராட்டினார். மேலும், தமிழ்நாடு புத்தாக்கத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட உயிர் பாதுகாப்பு நிலை III ஆய்வகம் மற்றும் கால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடு சார் பரிமாற்றத்தளம் ஆகியவற்றினையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவரின் சிறப்பு நேர்முக உதவியாளர் கே.ஆர்.ஜெகன்மோகன், கொள்கைக் குழுவின் பல்வேறு அலுவலர்கள், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சி.பாலச்சந்திரன், பதிவாளர் பா.டென்சிங் ஞானராஜ், ஆராய்ச்சி இயக்குநர் (பொறுப்பு) செசிலியா ஜோசப், கால்நடை நலக் கல்வி இயக்குநர் ஜி.தினகர் ராஜ் மற்றும் பல்கலைக்கழக அலுவலர்கள் உடனிருந்தனர்.