தமிழகம்

ராணிப்பேட்டை நகரில் ரூ.118.40 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை நகரில் ரூ 118 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 15.8.2019 அன்று சுதந்திர தின விழா உரையில், பெரிய மாவட்டமாக உள்ள வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, நிர்வாக வசதிக்காக, வேலூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, மாநிலத்தின் 35-ஆவது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. புதியதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு, ராணிப்பேட்டை நகரில் 28,711 சதுர மீட்டர் பரப்பளவில், 118 கோடியே40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தரை மற்றும் 4 தளங்களுடன் கட்டப்படவுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு முதலமைச்சர் நேற்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். இப்புதிய வளாகத்தில், வருவாய்த் துறை அலுவலகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கருவூல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுவலகம்,

கூட்டுறவுத் துறை அலுவலகம், பதிவுத்துறை அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகம், கால்நடை பராமரிப்பு துறை அலுவலகம், சுகாதாரத் துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, கனிமவளத் துறை போன்ற துறைகளின் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், தலைமைச் செயலாளர் க. சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்

அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிருவாக ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திரரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.