சிறப்பு செய்திகள்

பதக்கம் வென்ற மாணவ, மாணவியருக்கு ரூ.54 லட்சம் உயரிய ஊக்கத் தொகை – முதலமைச்சர் வழங்கி பாராட்டு

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 2018-2019ம் ஆண்டிற்கான 64-வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற சென்னையைச் சேர்ந்த 14 மாணவ, மாணவியருக்கு 54 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கி பாராட்டினார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றிவாகை சூடும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், சர்வதேச அளவில் பங்கு பெறும் விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி அளித்தல், மாணவர்கள் தங்கி விளையாட்டில் பயிற்சிபெற விளையாட்டு விடுதிகள் ஏற்படுத்துதல், கிராமப்புற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், மாவட்ட விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துதல், பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில், 2018-2019ம் ஆண்டிற்கான 64-வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகள், மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டைச் சார்ந்த 266 மாணவர்கள் 28 விளையாட்டுகளில் 88 தங்கம், 107 வெள்ளி, 109 வெண்கலப் பதக்கங்களையும், 306 மாணவியர்கள் 29 விளையாட்டுகளில் 135 தங்கம், 100 வெள்ளி மற்றும் 113 வெண்கலப் பதக்கங்களையும், என மொத்தம் 572 மாணவ, மாணவியர்கள் 652 பதக்கங்களைப் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமையைப் பெற்று தந்துள்ளனர்.

இப்போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய், என மொத்தம் 9 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.

அதன்படி, 64-வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகளில் ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்ற சென்னை, செவன்த் டே அட்வென்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.நவனீத் பிரபுவுக்கு 3.50 லட்சம் ரூபாய், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பதக்கம் வென்ற சென்னை, செவன்த் டே அட்வென்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.கிஷோர் அரவிந்த்திற்கு 2.50 லட்சம் ரூபாய், இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்ற சென்னை, செவன்த் டே அட்வென்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.பூஜா ஆர்த்திக்கு 4 லட்சம் ரூபாய், இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்ற சென்னை, செயின்ட் ரோஸரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.அக்–ஷயாஸ்ரீக்கு 4 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் வென்ற சென்னை, செவன்த் டே அட்வென்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெ.எஸ்.கிருத்திகாவுக்கு 3.50 லட்சம் ரூபாய்,

கேரம் விளையாட்டுப்போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெண்கலப்பதக்கம் வென்ற சென்னை, மேல்நிலைப் பள்ளி மாணவர் கே.அபுஅசேனுக்கு 3 லட்சம் ரூபாய், ஒரு தங்கம், ஒரு வெண்கலப்பதக்கம் வென்ற சென்னை, செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மாணவர் என்.மிதுனுக்கு 3 லட்சம் ரூபாய், ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டியில் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப்பதக்கம் வென்ற சென்னை, எஸ்பிஓஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.கிஷோர் வெங்கடேஷுக்கு 2.50 லட்சம் ரூபாய், ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்ற சென்னை, செயின்ட் மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.மீனலோக்–ஷினிக்கு 5 லட்சம் ரூபாய்,

நீச்சல் விளையாட்டுப் போட்டியில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கம் வென்ற சென்னை, செயின்ட் மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆல்பிரெட் ராஜனுக்கு 2.50 லட்சம் ரூபாய், ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்ற சென்னை, எம்.சி.சி மேல்நிலைப்பள்ளி மாணவி பி.பிரீத்திக்கு 6 லட்சம் ரூபாய்,தடகளப் போட்டியில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்ற சென்னை, ஜெய் கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பி.எம்.தபிதாவுக்கு 7 லட்சம் ரூபாய்,

ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்ற சென்னை, வித்யோதயா மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.கிரிதாரணிக்கு 3.50 லட்சம் ரூபாய், புல்தரை டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்ற சென்னை, அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பண்டாரு குந்தனாஸ்ரீக்கு 4 லட்சம் ரூபாய் என மொத்தம் 14 மாணவ, மாணவியருக்கு 54 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வழங்கி, பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மைச் செயலாளர். உறுப்பினர் செயலர் ரமேஷ் சந்த்மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.