தற்போதைய செய்திகள்

திருப்பூர் கால்நடை மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் விரைவில் துவக்கம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்

திருப்பூர்

திருப்பூர் கால்நடை மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெரியகோட்டை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பெண்களுக்கு விலையில்லா அசீல் இன நாட்டுக்கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உடுமலைப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெதப்பம்பட்டி, பூளவாடி, பெரியப்பட்டி, ராமச்சந்திராபுரம், வீ.வேலூர், குடிமங்கலம், பொட்டையம்பாளையம், பூலாங்கிணறு, மலையாண்டிக்கவுண்டனூர் பகுதிகளை சேர்ந்த 650 பெண்களுக்கு தலா 25 நாட்டுக்கோழிகள் வீதம் ரூ.13 லட்சம் மதிப்பில் விலையில்லா நாட்டுக்கோழிகளை வழங்கினார். அதைத்தொடாந்து, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மூங்கில்தொழுவு, குப்பம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற மனுக்கள் பெறும் சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:- 

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினார். குறிப்பாக பெண்களின் நலனில் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்ட அம்மா அவர்கள் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக விலையில்லா ஆடுகள், விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வந்தார். அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் அந்த திட்டங்களை தொடர்ந்து வழங்குவதுடன் விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார். இப்போது அந்த திட்டம் தமிழகம் முழுவதும் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

தெற்கு ஆசியா கண்டத்தில் இல்லாத வகையில் 1000 ஏக்கர் பரப்பளவில் சேலம் மாவட்டம் தலைவாசலில் விவசாயப் பெருங்குடி மக்கள், மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் சர்வதேச தரத்திலான ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக்கல்லூரி அமைக்க முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. நமது மாவட்டம் பண்ணைக்கிணறு பகுதியில் ரூ.253 கோடி மதிப்பீட்டில் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைவதற்கு ஆணை பிறப்பித்த முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இக்கல்லூரிக்கான பணிகள் விரைவில் துவங்கப்படுவதோடு மாணவர் சேர்க்கையும் துவங்கப்படவுள்ளது.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.